ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியான பின்னர் சில வாரங்களுக்குத் தான் அது பற்றிய பரபரப்பு நீடித்தது.
ஆனால் சனல்4 தொலைக்காட்சி தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் ஆவணப்படம் என்பன இலங்கை அரசுக்கு தொடர்ச்சியான நெருக்குதலைக் கொடுத்து வருகின்றன.
கடந்த முதலாம் திகதி பாதுகாப்பு அமைச்சு “மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள்“ என்ற அறிக்கை ஒன்றையும், சனல்4 குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான வீடியோ இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலரின் நிபுணர்குழு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்த பின்னர் அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்று இதுவரை அரசாங்கம் தீர்மானிக்கவில்லை.
ஐ.நா. பொதுச்செயலருக்கு அறிக்கை அனுப்புவோம் என்றது அரசாங்கம்.
பின்னர் அந்த அறிக்கை நிபுணர்குழுவின் அறிக்கைக்கான பதிலாக இருக்காது என்று கூறியது.
அதேவேளை பாதுகாப்பு அமைச்சும் மனிதாபிமானப் போர் பற்றிய அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிடும் என்றும் கூறப்பட்டது.
இன்றை வரை ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கைக்குப் பதிலை வழங்காத அரசாங்கம் அதை வழங்குமா இல்லையா என்று கூடத் தெளிவுபடுத்தவில்லை.
சிலர் அதற்குப் பதிலளிக்கக் கூடாது என்கின்றனர்.
வேறு சிலர் குற்றச்சாட்டுகள் உண்மையோ பொய்யோ பதிலளித்தே ஆக வேண்டும் என்கின்றனர்.
ஆனால், அரசாங்கமோ இந்த விடயத்தில் என்ன முடிவை எடுத்துள்ளது என்பதை தெளிவுபடுத்தவில்லை.
ஆனால், பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவினால் இந்த அறிக்கையின் முதல் பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அதனை சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் வெளியிடும் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது.
இந்த அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் எவரேனும் சரணடைவது பற்றி யாருமே தன்னுடன் பேசவில்லை என்று கூறியிருந்தார்.
சரணடைய முன்வந்த புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதான குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று வரும் நிலையில் தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ஷ இந்த உரையை நிகழ்த்த முன்னர், சனல்4 தொலைக்காட்சியில் மற்றொரு செவ்வி ஒளிபரப்பாகியிருந்தது.
58வது டிவிசனில் பணியாற்றிய படையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட இருவர் சனல்4 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் சரணடையும் புலிகளின் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிடம் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
பெர்னாண்டோ என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் படைச்சிப்பாய் யார் என்பதை சனல்4 இனம்காட்டவில்லை.
ஆனால் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் கோத்தபாய ராஜபக்ஷவும் தான் புலிகளைக் கொல்ல உத்தரவிட்டதாக நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது சனல்4.
ஏற்கனவே சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம், நட்டஈடு கோருவோம் என்று அரசாங்கம் மிரட்டிக் கொண்டிருந்த நிலையில் அடுத்த செவ்வியை வெளியிட்டது சனல்4.
இத்தகையதொரு நிலையில் புலிகள் எவரும் சரணடைய முன்வரவில்லை என்று கடந்தவாரம் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் சரணடைதலுக்கு சர்வதேச உதவிகள் நாடப்பட்டது உண்மை.
அதுபற்றி இந்தியாவுடன் பேசப்பட்டது.
அமெரிக்காவுடன் பேசப்பட்டது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நாவுடன் கூடப் பேசப்பட்டது.
இதுபற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்த போதும் அரசாங்கம் அதுபற்றியெல்லாம் கருத்துக் கூறாமல் இருந்து வந்தது.
ஆனால் அரசின் நீண்ட மௌனத்தை கலைத்தார் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
அவர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, போரின் இறுதியில் மே 16ஆம் திகதி புலிகள் சரணடைய முன் வந்தனர் என்று கூறியிருந்தார்.
சரணடையும் புலிகளின் தலைவர்களின் பட்டியலைத் தருமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கேட்டிருந்தார் என்றும் புலிகள் அதை வழங்கத் தவறி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் அந்தப் பட்டியலை வழங்கியிருந்தால் விளைவுகள் வேறு விதமாக இருந்திருக்கும் என்றும் ரம்புக்வெல கூறியிருந்தார்.
அதுபோலவே புலிகள் சரணடைய முன்வந்த தகவல் போர்முனையைச் சென்றடைய முன்னரே போர் முடிந்து விட்டிருந்தது என்றும் அரசதரப்புக் கூறியிருந்தது.
அப்படியிருக்க, பாதுகாப்புச் செயலரோ புலிகளின் சரணடைதல் பற்றி தன்னுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறியிருப்பது புதிய திருப்பம்.
இந்த விவகாரம் இறுகுவதால் தான் இவ்வாறு அரசதரப்பு தடம்புரள்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இன்னொரு பக்கத்தில், உண்மைசார்ந்த அறிக்கை என்று கூறி வெளியிடப்பட்ட அறிக்கையில் பல குழப்பங்கள், தவறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் 2006 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியை மையப்படுத்திய மனிதாபிமானப் போர் பற்றிய அறிக்கையாக இது குறிப்பிடப்பட்டாலும், அந்தக் காலப் பகுதிக்குரிய முழுமையாக தகவல்கள் ஏதும் இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.
2006ல் மனிதாபிமானப் போர் தொடங்குவதற்கு முன்னர் 19,282 படை யினர் கொல்லப்பட்டதாகவும், 82,104 படையினர் காயமுற்றனர் அல்லது அங்கவீனமுற்றதாகவும், 2609 பேர் காணாமற் போயுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் 2006 ற்குப் பின்னர் நடந்த போரில் எத்தனை படையினர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் என்ற விபரம் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
அதுமட்டுமன்றி போரில் கொல்லப்பட்ட புலிகள் பற்றிய புள்ளிவிபரங்களையோ அல்லது பொதுமக்களின் விபரங்களையோ இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 9800 பொதுமக்கள் புலிகளால் கொல்லப்பட்டதாகவும், 10,000 பேர் காயமடைந்ததாகவும் மட்டும் கூறப்பட்டுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எத்தனை பேர் அவர்களால் கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் தெரியாது என்று மட்டும் கூறப்பட்டுள்ளதே தவிர, போருக்குள் அகப்பட்டு மாண்டவர்களின் விபரத்தை இந்த அறிக்கையில் பதிவு செய்யவேயில்லை.
அதேவேளை இந்த அறிக்கை ஆரம்பத்திலேயே ஒரு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது, பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் போரை நடத்தும் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனது என்பதே அந்த உண்மை.
இதுவரை போரில் ஒரு பொதுமகன் கூடச் சாகவில்லை என்று தான் அரசாங்கம் கூறிவந்தது.
ஆனால் இப்போது அந்த நடைமுறையை பின்பற்றக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை என்று கூறியுள்ளது.
அதுமட்டுமன்றி புலிகளால் சிங்கள, முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் பற்றிய புள்ளிவிபரங்கள் அனைத்தும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள போதும் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
போரை முன்னெடுத்ததற்கான காரணம் என்ன என்பதை வலுயுறுத்துவதற்கே இந்த அறிக்கையில் அதிக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போர் எப்படி நடத்தப்பட்டது அதன் போது எவ்வளவு பேர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பன போன்ற அடிப்படைப் புள்ளிவிபரங்களை கூட இந்த அறிக்கை கொண்டிருக்கத் தவறியுள்ளது.
மேலோட்டமாக 2006 தொடக்கம் 2009 வரையான போர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அதை மையப்படுத்திய அறிக்கையாக இது அமையவில்லை.அதேவேளை இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்ற பட்டியலில் பருத்தித்துறை தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரத்தினம், உடுப்பிட்டித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இராசலிங்கம் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருமே இந்த அறிக்கையில் மரணமானதாக குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்குப் பின்னரும் உயிரோடு வாழ்ந்தவர்கள். இயற்கையாகவே மரணம் அடைந்தவர்கள்.
இதுபோலவே புலிகளுடன் நெருங்கிய உறவு வைத்திருந்து அவர்களால் மாமனிதர்களாகவோ நாட்டுப்பற்றாளர்களாகவோ கௌரவிக்கப்பட்டவர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநாயகம் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம், சின்னத்தம்பி சிவமகாராசா, நடராசா ரவிராஜ், சிவநேசன் மற்றும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டது போலவே அறிக்கையிடப்பட்டுள்ளது.
புலிகளால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளவர்களில் பலர், வேறு இயக்கங்களினாலும், உள்முரண்பாடுகளாலும் கொல்லப்பட்டவர்களும் அடங்கியுள்ளனர்.
ஆனால், எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கொட்டியிருக்கிறது பாதுகாப்பு அமைச்சு.
அதைவிட இந்த அறிக்கையில், புலிகளின் ஆயுதபலம் எவ்வளவு, ஆட்பலம் எவ்வளவு என்று பட்டியல் போட்டு பக்கங்கள் தான் நிரப்பப்பட்டுள்ளன.
தேவையான முக்கிய தரவுகள் எதுவுமே கொடுக்கப்படவில்லை.
புலிகளை எதற்காக அழிக்க வேண்டியிருந்தது என்பதை விளக்க கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மனிதாபிமானப் போரின் உண்மைகளை எடுத்துக் கூறுவதற்கு அளிக்கப்படவில்லை.
போரின் முடிவில் சரணடைய முன்வந்த புலிகள் பற்றி ஒரு வரியேனும் இந்த அறிக்கையில் இல்லை.
இதனால் தான் இதை ஒரு வெள்ளையடிக்கும் அறிக்கை என்று விமர்சித்துள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்று கூறி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் உண்மைகள் பல காணாமற் போயுள்ளன.
அடிப்படைத் தவறுகள் வெளிப்படையாகத் தெரியும் இந்த அறிக்கையை சர்வதேச சமூகம் எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்ததாக எடுத்துக் கொள்ளும் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
போர் பற்றிய அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய போரில் தொடர்புபட்ட படையினரின் சாட்சியப் பதிவுகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையாகவே இது அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பில் இருந்து இந்த அறிக்கை வெகுதூரம் விலகி நிற்கிறது.
தவறான தகவல்களை உள்ளடக்கியுள்ளதை இலகுவில் நிரூபிக்கத்தக்க இந்த அறிக்கை ஒருபோதும், ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கையையோ, சனல்4 குற்றச்சாட்டுகளையோ முறியடிக்கின்ற வல்லமை கொண்டதாக இருக்கப் போவதில்லை.
சுபத்ரா


No comments:
Post a Comment