இலங்கையை முற்றுகையிட அமெரிக்கா உளவுபார்த்து வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.எனவே, இலங்கை அரசு தனது படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் உள்ளூர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாளவேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான் பரப்பில் அத்துமீறி ஊடுருவியது தற்செயலாக இடம்பெற்ற செயலாக கருத முடியாது. தற்போது அவ்வாறான சம்பவம் நடைபெறவில்லையென்றும் அமெரிக்கா கூறி வருகின்றது.இதிலிருந்து உள்நோக்கமும் நாட்டிற்கு எதிரான முற்றுகையும் வெளிப்பட்டுள்ளது என்றும் அந்த இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் மிகவும் தீவிரமாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இலங்கை விஷயத்தில் அமெரிக்கா மிகவும் தீவிரமாகவே செயற்படுகின்றது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறியதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி ஏனைய நாடுகளில் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்துதல், சிறு நாடுகளை ஆக்கிரமித்தல் என்று பல்வேறு நடவடிக்கைகளிலும் அமெரிக்கா அண்மைக்காலமாக தீவிரமாக செயற்படுகின்றது.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இந்திய விஜயத்தின் போதும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்திருந்தார். தற்போது ஆசிய பசிபிக் கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள அமெரிக்க 7 ஆவது விஷேட கூட்டுப்படையின் 10 போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் ஊடுருவிச் சென்றுள்ளன.
இந்த ஊடுருவல் முதல் தடவையாக இடம்பெற்றதாக கூறமுடியாது. ஏனெனில் தற்போது வெளிப்படுகின்ற தகவல்களைப் பார்த்தால் பல தடவைகள் மிகவும் மர்மமான முறையில் அமெரிக்க விமானங்கள் உளவுபார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசு உஷார் நிலையில் இருக்க வேண்டும். ராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்காவினால் எப்போதும் ஆபத்து வரலாம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று குணதாச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments:
Post a Comment