தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது, புதிய தலைமை செயலகத்தை பற்றி ஒரு ஆங்கில பத்திரிகையில் ஒரு தகவல் வந்துள்ளது. யாரோ தவறான தகவலை கொடுத்து இருக்கிறார்கள். புதிய தலைமை செயலகத்தை தனியாகவோ, அதிகாரிகளுடனோ சென்று பார்த்து பலருடைய கருத்துக்களை வெளியிட வேண்டும். தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது.
புதிய தலைமை செயலகத்தில் கவர்னர் உரை படிக்கப்பட்டு விவாதம் நடந்துள்ளது. இதே கட்டிடத்தில் தான் பலமுறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. இந்த இடம் சட்டசபை நிகழ்வுகளுக்கு போதாது என்பதை ஏற்க கூடியதாக இல்லை.
சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்த ஜெயலலிதா அரசுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தது போல புதிய தலைமை செயலக வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சமச்சீர் கல்வி திட்டத்தை தாமதமாக செயல் படுத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் இடைக்கால இழப்பீட்டை ஈடுசெய்ய கல்வியாளர்களை கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
சமச்சீர் கல்வியின் வெற்றி, சாமான்ய மக்களுக்கு, மாணவர்களுக்கு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய அரசின் திட்டம் அதைப்பற்றி மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினையில் அரசியல் ஆதாயத்திற்காக பேசுபவர் ஜெயலலிதா. தி.மு.க. தமிழ் இனத்திற்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறது. தமிழ் இன படுகொலையை தி.மு.க. எப்போதும் ஆதரித்தது கிடையாது. இலங்கையில் போர் நடந்தபோது, போர் என்றால் சாகத்தான் செய்வார்கள் என்று ஜெயலலிதா கூறினார்.
ஒரு தமிழ் பத்திரிக்கை 35 ஆயிரம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் நான் போட்டு இருப்பதாக செய்தி வெளியிட்டு உள்ளது. எதை பற்றியும் விசாரிக்காமல் செய்தி வெளியிட்டுள்ளது. அதை நிருபிக்க வேண்டும். தவறான செய்தியை வெளியிட்ட அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் பேசி முடிவு செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment