இலங்கை பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்சவுடன் மிக முக்கிய நேர்காணலை ராஜேஷ் சுந்தரம் நடத்தினார். இந்தியாவின் அச்சு மற்றும் எலத்திரனியல் ஊடகங்கள் புது டில்லியின் வழிநடத்தலில் இயங்குகையில் மேற்கூறிய இணையம் தனிவழி நடப்பதை அவதானிக்க முடிகிறது.
தனது நேர்காணலில் மூன்று விடயங்களை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் வலியுறுத்தினார். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதால் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவை இனிமேல் தேவைப்படமாட்டாது. அவை பற்றிப் பேசும் அவசியமும் இல்லை.
இரண்டாவதாக தமிழக முதல்வரின் ஈழப் பிரச்சனை தொடர்பான சட்டசபைத் தீர்மானங்களும் அவை பற்றிய உரைகளும் அரசியல் இலாபம் ஈட்டும் நோக்கில் செய்யப்பட்டவை. புது டில்லி எம்பக்கம் இருக்கையில் தமிழகத்தால் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற ரீதியில் அவர் கருத்துக் கூறினார்.
மூன்றாவதாக போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசையும் இராணுவத்தையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச சமூகம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் சில மேற்கு நாடுகளும் அமைப்புக்களும் மாத்திரம் முன்வைக்கின்றன. பெரும்பான்மை உலக நாடுகள் இந்தக் கோரிக்கையை எதிர்க்கின்றன.
இந்தியா, சீனா,ருஷ்யா, பாக்கிஸ்தான், ஆபிரிக்க, மத்திய கிழக்கு, ஆசிய மூன்றாம் உலக நாடுகள் என்பன இலங்கைக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுக்கின்றன. இதனால் போர்க் குற்ற விசாரணை நடக்க வாய்ப்பில்லை என்றார் கொத்தபாய. அவர் இந்தியா, சீனா, ஆகியவற்றை மலைபோல் நம்பியிருக்கிறார்.
தமிழ் நாட்டைத் துச்சமாக மதிப்பவர் கொத்தபாய. கருணாநிதி கால சட்ட சபை உறுப்பினர்களைக் "கோமாளிகள்” (Clowns) என்று அவர் அழைத்தார். இந்திய பாதுகாப்பு சஞ்சிகை (Indian Defence Review) பிரசுரித்த அவருடைய இரு வருடத்திற்கு முந்திய நேர்காணலில் கருணாநிதியின் கோமாளித்தனமான உண்ணாவிரதத்தைக் கையாண்ட விதம்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறிய சஞ்சிகையின் நிருபர் சசிக்குமாருக்கு வழங்கிய நேர்காணலில் கருணாநிதியின் கபடநாடக இரகசியத்தை கொத்தபாய அம்பலப் படுத்தினார். கருணாநிதியின் வீழ்ச்சிக்கு இந்த உண்ணாவிரதமும் ஒரு முக்கிய காரணம். இழந்த செல்வாக்கை மீளப்பெறுவதற்காக கடந்த சில நாட்களாகக் கருணாநிதி ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றிப் பேசி வருகிறார்.
இங்கிலாந்தின் சனல்4 காட்சிப்படுத்திய இலங்கையின் கொலைக்களக் காணொளியை மீள் ஒளிபரப்பிய முதலாவது இந்திய இணையம் என்ற வரலாற்றுச் சிறப்பு இன்றைய தலைப்புச் செய்திகள் என்ற ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு உண்டு. இந்த ஊடகம் அத்தோடு தனது பணியை நிறுத்தவில்லை. தானும் சொந்தமாக இன்னொரு காணொளியைத் தயாரித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே தயாரித்து வெளியிட்ட காணொளியின் பெயர் ‘ இலங்கையின் இன அழிப்புக் கொலைக்களத்தை பார்த்த நான் சாட்சியம் கூறுகிறேன்” (I witnessed genocide inside lanka’s Killing Fields). ஒரு மணி நேரக் காணொளி செவ்வாய்க்கிழமை இரவு (9 ஆகஸ்ட்) இரு தடவை ஏழு மற்றும் ஒன்பது மணியின் போது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.
இதில் நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மருத்துவ மனைகள், பாதுகாப்பு வலையங்கள், மக்கள் குழுமும் இடங்கள் போன்றவற்றில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுக்கள், ஆட்டிலறிக் குண்டுத் தாக்குதல்கள் படமாகக் காட்டப்படுகின்றன. கொலையுண்டவர்கள், உறுப்புக்களை இழந்தவர்கள் படமாகியுள்ளனர்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நாளந்திரம் நடக்கும் பாலியல் வன்முறைகள் மனித உரிமை மீறல்களும் படமாகியுள்ளன. இலங்கை இராணுவம் அண்மையில் வெளியிட்ட பிரசாரக் காணொளியில் வன்னியில் போர் நடந்த காலத்தில் உணவும் மருந்தும் தாராளமாக இருந்தன என்று கூறப்படுகிறது.
இதை மறுக்கும் ஆதாரங்களை ஹெட்லைன்ஸ் டுடே தயாரித்த ஆவணப் படம் வெளியிட்டிருக்கிறது. மேலும் இலங்கை இராணுவம் பொது மக்கள் மீது வீசிய கொத்துக் குண்டுகள், இரசாயனக் குண்டுகளின் படங்களும் மக்கள் மீதான தாக்கமும் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.
மயக்க ஊசி மருந்து இல்லாமல் காயமடைந்தோருக்கு நடத்தப்பட்ட நெஞ்சை உலுக்கும் சத்திர சிகிச்சைக் காட்சிகளும் அடங்குகின்றன. இலங்கை அரசுக்கு சார்பான புதுடில்லியின் நிலைப்பாட்டிற்கு எதிராக மிகவும் மெதுவாகச் சில குறிப்பிடத்தக்க இந்திய ஊடகங்கள் நகர்வுகளை மேற்கொள்கின்றன.


No comments:
Post a Comment