தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசியுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் சமீபத்திய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் குறித்து இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் யதார்த்தங்களை உணராமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
உண்மையிலேயே இலங்கைத் தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசியுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்த அரசியல் நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வரை மட்டுமல்ல. ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள தமிழக சட்டமன்றத்தையும் அவர் இழிவு படுத்தியுள்ளார். இந்தத் துணிவு அவருக்கு வந்ததற்கு இந்திய அரசே முழுமையான காரணமாகும்.
மாநில முதல்வர்கள் இல்லையென்றால் இந்தியா இல்லை. தமிழக முதல்வரை அவமதிக்கும் போக்கினை அண்டை நாட்டின் அதிகாரி ஒருவர் மேற்கொள்வதை அனுமதிப்பது ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை அவமதிப்பதாகும். தமிழக முதல்வரையும் சட்டமன்றத்தையும் வரம்புமீறித் தாக்கியுள்ள கோத்தபாய ராஜபக்சவின் செயலைக் கண்டிக்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


No comments:
Post a Comment