இந்நிகழ்வில் ஒவ்வொரு நாளும் இசை, நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், தமிழ் மொழி வளர்ச்சிப் பொருட்டான ஆய்வுக் கட்டுரைகள், தமிழர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், அவர்தம் பாதுகாப்பு, பண்பாட்டு மேலாண்மை, உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு ஆகியவை பொருட்டு தமிழ் பேராளர்களும், அறிஞர் பெருமக்களும், தேசிய அரசியல் தலைவர்களும், சமய, கலை, இலக்கிய முன்னோடிகளும் வருகை தந்து கருத்துக்களை வழங்க உள்ளனர்.
இயக்கத்தின் மூத்த துணைத்தலைவர் திரு. வேல்பிள்ளை மற்றும் இந்திய ஒன்றியத் தலைவர். வழக்கறிஞர், கலைமணி ஆகியோரின் நேரிடை அழைப்பின் பேரில் தமிழகத்திலிருந்து தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராசா, விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், அறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் அறிஞர் ஜனார்த்தனம், பன்னாட்டு தமிழ் உறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோருடன் பல தமிழ் அறிஞர்களும், உணர்வாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
நடந்தவை அனைத்தும் தமிழர் நெஞ்சில் தணலாக கனிந்து கொண்டிருந்தாலும், வரும் காலத்தில் நடந்தவைகளின் மீளாய்வு, அதன் எதிர்கால வியூகம், அனைத்து தமிழர்களின் ஒற்றுமை ஆகியவை பற்றி தீர்மானிக்க வேண்டிய நிலையில் அங்கே நாம் ஒன்று கூடுகின்றோம்.
அவரவர் கருத்துக்களை தடையின்றி பரிமாறிக் கொள்வதற்கு அங்கே இடமுண்டு. மேற்கூறிய முக்கிய தலைப்புக்களில் தமிழ்த் தமிழர் முன்னேற்றம், வளம் ஆகியன பற்றி ஒரு இறுதி தீர்மானத்தை ஏற்பதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும். எனவே உலகத் தமிழர் யாவரும் அங்கே ஒன்று கூடுதல் அவசியம்.
வாருங்கள் தமிழர்களே! நமக்கென அமையும் ஒரு நல் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவோம். இனி தமிழர்களுக்கு விடிவு மட்டுமே என்ற உறுதியோடு களமிறங்குவோம். உலகமெலாம் நிறைந்துள்ள ஒரே இனம் நம் தமிழினம்தான். அரசியல் இடர்ப்பாடுகளும்,தொலைவும், பிரிவும் நம் இனத்தை மீளமுடியா இழப்புகளில் செலுத்திக் கொண்டுள்ளன.
அடுத்து வரும் சந்ததியினருக்கு நம் மொழி, இன, பண்பாடு பற்றி அறிய முடியா நிலையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இது போன்ற மாநாடுகள் நம்மை ஒன்று திரட்டி, மொழியால், இனத்தால், பண்பாட்டால் இணைக்கும் பணி மிக மிக அவசியமானதுதான்.
நாம் இழந்தவைகளை மறுபரிசீலனை செய்து மேலான செயல் திட்டங்களுக்கு நாம் ஒன்று கூடுதல் அவசியம். தமிழர்கள் எங்கிருப்பினும் வாழும் நாட்டால், அரசியல் மாறுபாட்டால் பிரிந்து விடாமல் அனைவரும் ஒரே இனம், ஒரே மொழியினர் என்ற உண்மையின் அடிப்படையில் எல்லோரும் தமிழரே என்ற உணர்வோடு இனியாவது ஒரு இறுதி முடிவு எடுப்போம்.
மொழி வளம் ஒரு இனத்தின் வளம். ஒரு இனத்தின் வளம் அதன் பண்பாட்டின் வளம். எனவே தமிழர் தோள் உயர்ந்தால் இனி தோல்வியில்லை - வெற்றி ஒன்றே என்ற சிந்தனையோடு தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். தமிழன் வீழ்ந்தால் முட்டுக்கொடுப்போம்.
அவனே நன்கு வாழ்ந்தால் தட்டிக் கொடுப்போம். நம்மை எது பிரிக்கிறதோ அதனை விளக்கி வைப்போம் - எது ஒன்று சேர்க்கிறதோ அதனை இறுக்கிப் பிடிப்போம்.
நமக்கு விடிவு தரும் முடிவுகள் அங்கேதான் காத்திருக்கின்றன என்ற தெளிந்த உணர்வோடு. நாம் ஒன்றுபட்டால் என்றும் நமக்கு வீழ்ச்சியில்லை. வாருங்கள் வடம் பிடிப்போம். தமிழ்த் தேரினை ஒன்றாக சேர்ந்து இழுத்து நிலை நிறுத்துவோம்.
நமது மொழி, இனம், வாழும் மண், உறவுகள் அனைத்தும் எழுச்சி பெற இம்மாநாடு நல்லதொரு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழர்களே அணி திரள்வீர்.
நாம் இன்றி நாடில்லை-பெரும் பேரில்லை என சங்கநாதம் செய்து, பாரிஸ் மாநகர் நோக்கி திரளுங்கள்.
தலைவர், இந்திய ஒன்றியம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (சென்னை) மின்னஞ்சல்: imtc1951@yahoo.in


No comments:
Post a Comment