
வன்னியில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பெருமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து மீளக் குடியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
முல்லைத்தீவு ,கிளிநொக்சி மாவட்டங்கள் தொடர்ந்து கொட்டும் அடை மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு 6500இற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளங்கள் நிரம்பி வழிவதால் கிளிநொச்சியின் சிவபுரம் கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
இரணைமடுக் குளத்தை அண்டிய திருவையாறு உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பொது இடங்களிலும் பாடசாலைகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவு குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
24 நிலையங்களில் 1369 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று நிலையங்களில் 3000இற்கும் அதிகமான குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எனினும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பற்றிய சரியான தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதால், வெள்ளப்பாதிப்பு அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனையிறவு கடலேரியின் நீர்மட்டம் அதிகரித்து, தட்டுவன்கொட்டி, உமையாள்பரம், புளியம்பொக்கணை, பரந்தன், கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளுக்குள் நீர் புகுந்துள்ளது.
அதேவேளை கிளிநொச்சி நகரைச் சூழவுள்ள கிராமங்களும், முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களும், வன்னேரி, மாங்குளம், மல்லாவி, துணுக்காய் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று மட்டும் 165 மி.மீற்றர் மழை பெய்திருப்பதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே திருகோணமலை மாவட்டத்திலும், மட்டக்களப்பிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல வீதிகள் வெள்ளத்தில் மிதப்பதால், போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.
ஜமாலியா, அலஸ் தோட்டம் கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்ததால், நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன


No comments:
Post a Comment