சிறீலங்காவில் தமிழர்களை கொலை செய்த சிங்களப் படைகள் இதுவரை தண்டனை பெற்றதாக சரித்திரம் இல்லை. கடந்த 30 வருடகால போரில் மூன்று இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையான தமிழ் மக்கள் அந்த நாட்டில் கொல்லப்பட்டுள்ளார்கள். இதுவரை யாரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.குறைந்த பட்சம் யூலைக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொலை செய்த சிங்களக் காடையர்களில் ஒருவர் கூட தண்டிக்க வழி செய்யாத ஏமாற்று அறிக்கைதான் அன்றைய சன்சோனிக் கமிஷன் அறிக்கை. அதுபோல இன்னொரு சன்சோனி கமிஷன் அறிக்கையாக வெளியாகியிருக்கிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை.
இதுபற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சிங்கள அரசு சர்வதேசத்தை ஏமாற்ற எழுதிய அறிக்கைக்கும் தமிழ் மக்களின் சுதந்திர வாழ்விற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
சிந்தித்துப் பார்த்தால்..
எதிர் காலத்தில் மறுபடியும் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படாமாட்டார்கள் என்பதற்கு இந்த அறிக்கையில் எந்த உத்தரவாதமும் இல்லை.
தமிழ் மக்கள் முற்றாக அழிக்கப்படலாம், அதன் பின்னரும் ஒரு நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டால் சிங்கள அரசு நிரபராதியாகிவிடலாமென்ற தப்பான வழிகாட்டுதலுக்கு இந்த அறிக்கை முன்னுதாரணமாக இருக்கிறது.
21ம் நூற்றாண்டிலாவது சிங்கள இனவாதம் சமாதானத்தை வெல்லும் தகுதியை பெற்றுள்ளதா ? மேற்கண்ட கேள்விக்கு சர்வதேச சமுதாயம் வைத்த பரீட்சைக்கான றிப்போட் சீட்டே இந்த அறிக்கை.
அறுபது ஆண்டுகள் படித்தும் சமாதானத்தில் சிங்கள பௌத்த இனவாத அரசு பெற்றது சைபர் புள்ளிதான் என்பதே அறிக்கைக்கான மதிப்பீடு !
சிங்கள இராணுவம் குற்றமற்ற இராணுவம் என்ற தீர்ப்பை வழங்கிய ஓர் ஆணைக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவா..?
இதுவா வடக்கின் வசந்தம்…?
சிங்கள மக்கள் தங்களைத் தாங்களே கேட்க வேண்டிய கேள்வி இதுதான்..அவர்கள் கேட்கவில்லை..
அதனால்தான்..:
தாம் எதிர்பார்த்தது போலவே இது ஓர் ஏமாற்று அறிக்கை என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது.
முதலில் சிறீலங்கா அரசு சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச சமுதாயம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது உண்மை. அவர்களை போரில் தோற்கடிக்க வேண்டுமென முடிவு செய்ததும் உண்மை.
எதற்காக அந்த முடிவை உலக நாடுகள் எடுத்தன என்ற கேள்விக்கு சரியான பதில்கள் பல உண்டு. அதில் முக்கியமானது : இனப் பிரச்சனையை பேசித் தீர்க்க முடியவில்லை. ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் முடிவடைய போர் ஆரம்பிக்கிறது. சிங்கள அரசு யாதொரு தீர்வையும் வழங்க முன்வருவதாயில்லை. இந்தியாவோ தமிழர்கள் மீது கொண்ட குரோதத்தை மாற்றுவதாகவே இல்லை. இதை அடிப்படையாக வைத்துத்தான் அவர்கள் ஒரு நிலைப்பாடு எடுத்தார்கள்.
கடைசியாக நோர்வே வெளியிட்ட அறிக்கையில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தமிழர் மீதான இந்திய நடுவண் அரசின் காழ்ப்புணர்ச்சியே சமாதானத்தை எட்ட முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் என்று துல்லியமாக தெரிவிக்கிறது. எனவே இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் விடுதலைப் புலிகளின் பக்கமாக தோல்வியின் பொதி தள்ளப்பட வேண்டும் என்ற யதார்த்தமே எஞ்சியிருந்தது.
அந்த வகையில் ஐ.நாவில் உறுப்புரிமை பெற்றுள்ள ஒரேயொரு காரணத்திற்காக சிறீலங்கா அரசு வெற்றி பெறும்படியாக சர்வதேச சமுதாயம் முடிவுகளை வகுத்தது. ஆனால் அந்த வாய்ப்பை சிறீலங்கா அரசு சரியாக பயன்படுத்தாமல் இனவாதப் போரை நடாத்தியுள்ளது. இதுதான் இந்தப் போரில் சிறீலங்கா அரசு இழைத்த தவறு. சர்வதேச சமுதாயம் ஏமாற்றப்பட்ட முட்டாள்தனமான புள்ளியும் இதுதான்.
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப் புலிகளை வரவேற்று, அவர்கள் தலைமையில் அமைதித் தீர்வை கண்டிருந்தால் நிலமை மாறியிருக்கும். அதற்கான இராஜதந்திர அறிவு சிங்கள இனவாதத்திடம் இல்லை.
இதுதான் சிறீலங்காவில் நடந்த பெரிய சோகம்: ஆனால்..
இந்த விவகாரத்தில் சிறீலங்கா மட்டுமல்ல சர்வதேச சமுதாயமும் மிகப்பெரிய குற்றவாளி என்பதை மறுக்க முடியாது. ஒரு வார காலத்தில் 140.000 பேர் கொல்லப்பட, பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட, வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் தீர்த்துக்கட்டப்பட, சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலைக்கூட இன்றுவரை வெளியிடாமல் இருக்கும் ஓர் அரசுக்கு ஆதரவு வழங்கிய சர்வதேச இராஜதந்திரத்திற்கு கிடைத்த பாரிய தோல்வியாகும்.
மேலும் யூலைக்கலவரத்தில் நடந்த மானிடப் படுகொலை குறித்து உலக சமுதாயமும் இந்தியாவும் மௌனம் காத்த காரணத்தால் சன்சோனி கமிஷன் அறிக்கையை வெளியிட்டு உலக சமுதாயத்தை சிறீலங்கா ஏமாற்றியது. தமிழர்கள் கொல்லப்பட்டால் தண்டனை இல்லை என்பதை தெட்டத்தெளிவாக ஐ.நா ஆமோதித்தது உண்மை, அது வரலாறு.
அன்று காத்த சர்வதேச மௌனம் இன்று இன்னொரு ஊமத்தங்காயாக பிதுங்கி வந்திருக்கிறது.
ஐ.நாவில் உறுப்புரிமை பெற்ற ஒரு நாடு என்ற காரணத்தால் மௌனம் காக்கும் ஐ.நா, சிறீலங்காவை தனது உறுப்பினராக வைத்துக் கொண்டு உலக நியாயம் பேச முடியாது. ஐ.நாவில் இருந்து போர்க்குற்றம் புரியும் நாடுகளை வெளியேற்ற முடியாது என்றால் நாடற்ற இனங்கள் அழிய வேண்டும் என்பதே ஐ.நாவின் வேதமாக இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து சிறீலங்காவைக் குறைகூற எதுவும் இல்லை. குற்றவாளியே நீதிமன்றத்தையும் அமைத்து தானே சுற்றவாளி என்று வழங்கிய தீர்ப்பே இந்த அறிக்கை.
இந்த அறிக்கை ஈழத் தமிழ் மக்களுக்கு புதிதல்ல..
ஆனால்..
21ம் நூற்றாண்டில் மாறிவரும் உலக ஜனநாயகத்தில் மாறாத பழைய பழைய செருப்புபொன்று தென்னாசிய அரசியல் சேற்றில் இருந்து பீறிட்டு வெளி வந்திருக்கிறது.
சேறு பூசிய அந்தச் செருப்பு சட்டெனச் சுழன்று ஐ.நாவின் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறது..
ஈழத்தில் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட சர்வதேச சமுதாயத்தால் வழங்கப்பட்ட திறந்தவெளி லைசென்ஸ் இன்னமும் கலாவதியாகவில்லை என்பதே அந்த அடியில் கேட்கும் பளீரென்ற ஓசை..!
என்ன செய்யப்போகிறது ஐ.நா..
பைத்தியக்காரர்களே..!
பாவல் போட்டால் சுரைக்காயா விளையப்போகிறது..!?
சர்வதேச சமுதாயம் விதைத்த பயங்கரவாத பட்டியல் விதை இப்போது அதைவிட பெரிய பயங்கர பூசனிக்காயாக அறுவடையாகியிருக்கிறது.
சிறீலங்காவில் எதை விதைத்தாலும் அது இனவாதமாகவே விளையும்..!
சொல்லச் சொல்ல கேட்காமல் விதை விதைத்த ஐ.நா செயலர் இந்த சுடலைப் பூசனிக்காயை தலையில் வைத்து கூத்தாட வேண்டியதுதான்.
அலைகள் தெற்காசிய அரசியல் விவகாரப் பிரிவு. 18.12.2011


No comments:
Post a Comment