
விடுதலைப் புலிகளின் போர்க்காலச் சிந்தனையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகிறது. அவர்களிடம் இன்னமும் ஈழக்கனவே இருக்கிறது என்று தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
அலரி மாளிகையில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டில் இருந்து விடுபட வேண்டும்.
அவர்கள் நாட்டில் உள்ள தமிழ்மக்களின் பிரதிநிதிதிகளாகத் தான் நடந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்துள்ள புலிகளின் ஆதரவாளர்களின் தேவைக்கேற்ப செயற்படக் கூடாது.
பேச்சுக்களின் போது கூட அவர்கள் விடுதலைப் புலிகள் போன்று தான் நடந்து கொள்கிறார்கள். ஈழக்கனவு இன்னமும் அவர்களிடம் இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்து, அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற- தேசப்பற்றற்ற -நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.
சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளது ஆபத்தானது. நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது.
சிறிலங்காவிலேயே அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தான்.
அவர்களுக்கு தமிழர் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் காணும் அக்கறையில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
ஆண்டுகால போரைப் பற்றிக் கவலைப்படாத அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகம்- 30 ஆண்டுகாலத்தில் விடுதலைப் புலிகள் செய்த கொடூரங்களைப் பற்றி விசாரணை செய்வதற்கு அக்கறை காட்டாத அனைத்துலக சமூகம், போரின் இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகளில் மாத்திரம் ஆர்வம் காட்டுகிறது.
சிறிலங்காவை இந்த விடயத்தில் குற்றம்சாட்டும் அனைத்துலக சமூகம் ஏனைய நாடுகளைப் பொறுத்தவரை வேறு விதமாக நடந்து கொள்வது கவலை அளிக்கிறது.
திருகோணமலையில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை நடத்தி, சிறப்பு அதிரடிப்படையினர் பலரைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்கும் அளவுக்கு மிகவும் நேர்மையான கொள்கையை கடைப்பிடித்தது.
10 மாதங்கள் வரை விளக்கமறியலில் இருந்த இவர்களை, கருணைகாட்டி விடுவிக்குமாறு ஆனந்தசங்கரி என்னிடம் வேண்டுகோள் விடுத்த பின்னரே நான் அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தேன்.
அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் மாகாணங்களுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்து கொடுக்க முடியாது.
ஆனால் தமிழ் இளைஞர்களை எந்தக் கட்டுப்பாடுமின்றி சிறிலங்கா காவல்துறையிலும் இராணுவத்திலும் சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த விடாமல், அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு அழுத்தங்களை கொடுக்கும் தீய எண்ணத்துடன் காணி, காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும் என்று இப்போது புதிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
அவ்வாறு காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் என்னால் எனது சொந்தக் கிராமத்துக்கே செல்ல முடியாது போகும். நான் கொழும்பிலேயே நிரந்தரமாக வாழ வேண்டியிருக்கும்.
இதொகாவும், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் கூட காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதை விரும்பவில்லை.
வடக்கில் இப்போது ஒரு புதிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளது.
ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற ஒரு குழுவினர் தமிழ் இளைஞர்களை இணைத்து, சதி வேலைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது,
இவர்கள் முன்னாள் புலிகளையும் சேர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
1970ம் ஆண்டில் ஜே.வி.பி. பலரை ஒரே வகுப்பில் சேர்த்து 5 பாடங்களை நடத்தி அவர்களின் மனதை மாற்றியது போலன்றி, இம்முறை தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பாடங்களை நடத்துவதாகப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்த இந்தக் குழுவின் தலைவர் ஒருவர் நாடு திரும்பிய பின்னர் இப்போது தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சரத் பொன்சேகா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை விடுவிக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தால், அதனைப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பேன்.
என்னிடம் வந்து அவரை விடுவிக்குமாறு கேட்பதற்கு பதிலாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இதனைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்பு வருகிறது.
பத்து இலட்சம் அல்ல, எத்தனை இலட்சம் கையொப்பங்களை இட்டாலும், ஒபாமாவினால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த விடயத்தில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.“ என்று சிறிலங்கா அதிபர் மேலும் கூறியுள்ளார்


No comments:
Post a Comment