பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்டு, சிறிலங்கா அரசாங்கத்தினைப் போர்க்குற்ற நெருக்கடிக்குள் தள்ளியுள்ள ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் நோர்வே தேசியத் தொலைக்காட்சியான என்ஆர்கே2 (NRK2) ல் நாளை ஒளிபரப்பப்படவுள்ளது.இன்றைய ஆவணம்’ எனும் நிகழ்ச்சிப் பிரிவில், நாளை செவ்வாய்க்கிழமை (27.09.2011) இரவு 10.30 மணிக்கு, ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படத்தினை ஒளிபரப்பவுள்ளதாக NRK நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய ஆவணம்’ நிகழ்ச்சிப் பிரிவில் இதனை ஒளிபரப்புவது தொடர்பாக NRK தொலைக்காட்சி அளித்துள்ள விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் உண்மையில் என்ன நடந்தது? சிறிலங்கா அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளை கண்மூடித்தனமாகக் கொன்று, பொதுமக்கள் தங்கியிருந்த அகதி முகாம்கள் மீது குண்டு வீச்சு நடாத்தினர். வெளியுலகைச் சேர்ந்த எவரும் அங்கு இருக்கவில்லை. ஆனால் மிருகத்தனமான இந்த நடவடிக்கைகள் படையினராலும் அங்கிருந்த மக்களாலும் படம் பிடிக்கப்பட்டிருந்தன.
பிரித்தானிய ஊடகவியலாளர்கள் அந்த ஒளிப்பட ஆதாரங்களை ஒருங்குசேர்த்து ஆவணப்படமொன்றினை உருவாக்கியுள்ளனர். பிரித்தானிய சனல் 4 ல் ஒளிபரப்பப்பட்ட மிகக் கொடூரக் காட்சிகள் நிறைந்த ஆவணப் படங்களில் ஒன்று ‘இலங்கையின் கொலைக்களம்’ என NRK வின் விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய ¨இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் அவுஸ்திரேலியாவின் ABC தொலைக்காட்சியின் ‘நான்கு கோணங்கள்’ நிகழ்ச்சி, இந்தியாவின் Headlines Today‘ தொலைக்காட்சி, ஜெயா ரிவி ஆகியவற்றில் கடந்த காலங்களில் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
தமது நோர்வேஜிய நண்பர்கள், அரசியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இத்தகவலைத் தெரியப்படுத்தி, சிறிலங்காவின் இன அழிப்பு, போர்க்குற்றங்கள் மீது கவனக்குவிப்பினை ஏற்படுத்துமாறு நோர்வேயில் வாழும் தமிழ் மக்களை கேட்டுக் கொள்கின்றது.


No comments:
Post a Comment