இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும்,பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன.ஆனால் இவையாவற்றையும் எழுதுவனதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு.ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது “வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு'. ஆகையால் யதார்த்தங்களை வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன்.
ஐ.நா. மனித உமை கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபை யில் கியூபா, சீனா, பாகிஸ்தான் என்பன இலங்கைக்காக வக்காளத்து வாங்கியதும் உண்மை. அதனைத் தொடர்ந்து இலங்கை ஐ.நா. ஜெனீவா தூதுவராலயத்தினால் ஐ.நா. மண்டபத்தில் ஓர் பிரசாரக் கூட்டம் நடத்தி அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு கொழும்பிலிருந்து வருகை தந்த மாபெரும் குழு பதில் கூறாமல் சமாளித்ததும் உண்மை.
இதேவேளை கனடாவினால் முன்னெடுக்கப்பட்ட இலங்கை மீதான ஓர் தீர்மானம் இச் சபையில் முன்னெடுக்கப்படும் என்ற செய்தியும் உண்மைதான். அப்படியானால் கனடா எதற்காக இந்த பிரேரணையை முன்வைத்தது? எதற்காக வாபஸ் பெற்றார்கள்? இதற்காக மற்றைய நாடுகளின் ஆதரவு இருந்ததா? இதில் தமிழர் பங்கு என்ன இவை போன்ற முக்கியமான கேள்விகள் இங்கு எழுகின்றன. இந்த வரிசையில் நாம் ஒவ்வொன்றாக இக் கேள்விகளை ஆராய்வது மிக முக்கியம்.
எதற்காக கனடா இப்படியாக ஓர் தீர்மானத்தை இலங்கை மீது முன் வைக்க முனைந்ததுவென நாம் ஆராய்வோமானால் அதற்கான விடையை நாம் மிக இலகுவாக அமெரிக்காவின் பிரதிநிதி றொபேர்ட் ஓ பிளேக்கின் கடந்த வார இலங்கை விஜயத்துடன் இணைத்துப் பார்க்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி.யினால் செய்யப்பட்ட றொபேர்ட் பிளேக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் அத்துடன் இலங்கை அரசினால் மிகைப்படுத்தப்பட்ட இடம்பெயர்ந்தோர் நிலை அரசியல் பேச்சுவார்த்தை போன்றவை அமையலாம்.
அப்படியானால் கனடா விசேடமாக கடைசி நேரமான கடந்த வியாழக்கிழமை எதற்காக தாம் முன்வைக்கவிருந்த பிரேரணையை வாபஸ் பெற்றார்களென்று கூறும் பொழுது இதை நாம் தற்பொழுது நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையுடன் இணைத்துப் பார்க்க முடியும்.
அங்கு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக ராஜபக்க்ஷ சென்றுள்ளார். இதே இடத்தில் அங்கு இந்தியா உட்பட பல உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் உள்ளார்கள்.
அப்படியானால் எந்த நாட்டு தலைவன் செல்வாக்கை பாவித்து ஜனாதிபதி ராஜபக்க்ஷ கனடா, அமெரிக்க நாடுகளுடன் பேரம் பேசினாரா என்பது தெரியவில்லை.
அடுத்து கனடாவின் இந்த முயற்சிக்கு மற்றைய ஐ.நா. மனித உரிமைச் சபை அங்கத்துவ நாடுகளின் ஆதரவு இருந்ததா என ஆராயுமிடத்து நிச்சயம் இருந்தது என நான் கூறுவேன்.
காரணம் கடந்த புதன்கிழமை மாலை கனடா தூதரகத்தினால் ஐ.நா மண்டபத்தில் இப் பிரேரணை சம்பந்தமான உரையாடலில் பல ஐரோப்பிய, தென் அமெரிக்க, அமெரிக்க நியூஸ்லாந்து போன்ற நாடுகள் ஆதரவு காட்டியிருந்தன. ஆனால் வழமையான சீனா, ரஷ்யா, கியூபா, அல்ஜீயா, பிலிப்பைன்ஸ், மலேசியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே மீண்டும் மீண்டும் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.
இப்படி எட்டு ஐ.நா. நாடுகள் மட்டுமே எதிர்ப்புக் கூறியிருந்தால் மனித உரிமை சபையில் உள்ள 47 நாடுகளில் மிகுதி நாடுகளின் நிலை என்ன?
இதில் அங்கத்துவ நாடான லிபியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இதில் 38 நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் நடுநிலைமை வகித்தாலும் கனடாவினால் முன்மொழியவிருந்த பிரேரணை முன்மொழியப்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்பதில் எந்தவித ஐயமில்லை.
இறுதியாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் பங்கு இங்கு என்னவென கேட்குமிடத்து இதற்கு நல்ல பதில் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. முன்றலில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான புலம் பெயர் வாழ் மக்களின் எழுச்சியை நாம் இங்கு பெருமிதத்துடன் எடுத்துக் கொள்ளலாம்.
இதே இடத்தில் “பூவுடன் சேர்த்த வாழை நாரும் மோட்சம் போகும்' என்பது போல் ஐ.நா மனித உரிமை செயற்பாடுகளில் தம்மை முள்ளிவாய்க்காலின் பின்னர் இணைத்தவர்களையும் சர்வதே சமுகத்தின் ஆதரவு தமிழ் மக்களுக்குக் கிடைத்த பின்னர், தாம் முன்னின்று நடத்தினோம் என்று கூறுவதா? அல்லது ஏற்கனவே நடைபெறும் வேலையை குழப்புகிறார்களா என்பதை காலம் தான் பதில் கூறும்.
இறுதியாக கூறுவதானால் கனடாவினால் கொண்டு வரவிருந்த கானல் நீரை கண்டு நாட்டிலோ, புலம் பெயரிலோ தமிழ் மக்கள் சலிப்பு அடையாது தமது நீண்டகால வேலைத்திட்டங்களை முழு முயற்சியுடன் தொடர்ந்து செயற்பட வேண்டும்.
ஜெனிவாவிலிருந்து ச. வி. கிருபாகரன்


No comments:
Post a Comment