
எட்டு மாதங்களின் முன்னர் பொன்னம்பலம் தனேஸ்வரன் தனது பணிக்குச் செல்லும் போது படகை மட்டும் பயன்படுத்தியதுடன் நின்றுவிடாமல், வெள்ளப் பெருக்கால் வரும் ஆபத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உயிர்காப்பு அங்கியையும் அணிந்து கொண்டே சென்றிருந்தார்.
சிறிலங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தொலை தூரப் பிரதேசமான வெருகல் பிரதேச செயலர் பிரிவின் அரசாங்க அதிபராகக் கடமையபற்றும் தனேஸ்வரன், இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இரு வாரங்கள் தொடர்ந்து இடம்பெற்ற வெள்ளப் பெருக்கால் சூழப்பட்ட அந்த நாட்கள்பற்றித் தெரிவித்தார்.
டிசம்பர் 2010ம் ஆண்டிற்கும் இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தின் ஆரம்ப நாட்களுக்கும் இடையில், தலைநகர் கொழும்பிலிருந்து 270 கிலோமீற்றர் தொலைவிலுள்ள இவ் வெருகல் பிரதேசமானது ஒரு ஆண்டில் பெறுகின்ற மழைவீழ்ச்சியைப் பெற்றுக் கொண்டது.
ஆனால் தற்போது பாலைவனத்திற்குள் தான் அகப்பட்டுவிடுவேனோ என தனேஸ்வரன் கருதுகிறார். "கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் பின்னர் இப்பிரதேசத்தில் மழை பெய்யவில்லை" என தனேஸ்வரன் தெரிவிக்கிறார்.
தற்போது இப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள தொலைதூரக் கிராமங்களுக்குத் தேவையான நீரை வழங்குகின்ற பணியைத் தான் ஆற்றவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளையில் தனேஸ்வரனின் செயலகத்திலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Thanamallvilla என்ற இடத்தில் சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை நடாத்திவரும் கத்தோலிக்க மதகுருவான மொடஸ்ரஸ் பெர்னாண்டோ என்பவர் நீர்ப் பற்றாக்குறையால் பல்வேறு கடினங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வறண்ட அல்லது நீர்வற்றிப் போன ஆற்றுப் படுக்கைகளில் பெரிய குழிகளைத் தோண்டி அவற்றுள் திறந்த வாயைக் கொண்ட உருளைகளைப் புதைத்து இரவு நெடுநேரம் வரை அதிலிருந்து ஊறுகின்ற நீரைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் பெர்னாண்டோ தெரிவித்தார்.
"இவ்வாறு இரவு நெடுநேரம் வரை காத்திருந்து நீரைப் பெற்றே எங்களால் குளிக்க முடிகிறது" எனவும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் கிழக்குப் பிரதேசமானது பல்வேறு விதமான பருவகால மழைகளைப் பெறுகின்ற இடமாகும். சிறிலங்காத் தீவில் ஏற்படும் காலநிலை மாற்றமானது இதன் கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் அதிக தாக்கத்தை விளைவிப்பதுடன், அங்கு மேற்கொள்ளப்படும் நெற்பயிர்ச் செய்கையிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெருகலில் 7000 ஏக்கருக்கும் மேற்பட்ட பிரதேசத்தில் பயிரிடப்பட்ட நெல் உற்பத்தியானது அழிவடைந்ததாக தனேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிரிடப்பட்ட நெல்லானது முற்றிலும் வெள்ளத்தால் அழிவடைந்ததாக விவசாயத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட 2.7 m மெற்றிக் தொன் நெல் அறுவடையில் 700,000 மெற்றிக் தொன் நெல்லானது வெள்ளப் பெருக்கால் அழிவடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நெல் அறுவடையின் போது தாக்கத்தைச் செலுத்தும் காலநிலை மாற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதுடன், இதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
"நெல்லானது பிரதான அறுவடைப் பயிராக உள்ளது. அத்துடன் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு நெல்லரிசியானது மிகப் பிரதானமானதாக உள்ளது" என சிறிலங்காவில் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் சுயாதீன நிறுவனமான வறுமைக்கான மாற்றுச் செயற்பாட்டு மையத்தின் ஆராய்ச்சியாளரான அமிலா பாலசூரியா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் 800,000 இற்கும் மேற்பட்ட நெல் அறுவடையாளர்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 50 ஆண்டுகளில் பதிவாக்கப்பட்ட வடகிழக்குப் பருவக்காற்றின் போது பெறப்படும் மழைவீழ்ச்சியின் போக்கானது மிகவும் மாறுபட்டதாக உள்ளது. இப்பருவக்காற்றின் மூலம் பெறப்படுகின்ற மழைவீழ்ச்சியானது சிறிலங்காவின் பிரதான உற்பத்தியான நெற் பயிர்ச்செய்கைக்குத் தேவையாக உள்ளது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் வெப்பநிலையானது 35 பாகை செல்சியசிற்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெப்பநிலையின் அளவானது அதிகரிக்கப்படுமிடத்து இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல்லின் அளவானது வழமையாக ஏப்ரல் மற்றும் செப்ரெம்பர் மாதங்களிற்கிடையில் பயிரிடப்படும் இரண்டாவது நெற் போகத்தின் போது கிடைக்கும் நெல்லின் அளவை விடக் குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காலநிலையின் தாக்கமானது தேசிய விவசாயத்தில் ஏற்படுத்தும் விளைவை எவ்வாறு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் கூடி ஆராய்ந்துள்ளதாக பாலசூரியா தெரிவித்தார்.
எதுஎவ்வாறிருப்பினும், பல்வேறு அமைச்சுக்களுக்கிடையில் இவ்வாறான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டமானது பற்றாக்குறையாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
"இந்நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது" எனவும் ஆராய்ச்சியாளரான பாலசூரியா சுட்டிக்காட்டினார்.
செய்தி வழிமூலம்: Alertnet // Amantha Perera
மொழியாக்கம்: நித்தியபாரதி/"புதினப்பலகை"


No comments:
Post a Comment