நேற்று (25.09.2011) கல்முனை டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது
கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்துடன் தமிழ் மக்களுக்கான தலைமை அழிந்து விட்டதெனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அரசியல் தீர்வையும் வழங்கத் தேவையில்லை என்றும் இலங்கை அரசும் அதனோடு இணைந்த கட்சிகளும் தெரிவித்தன.
அது மட்டுமின்றி யுத்த வெற்றியைக் காரணம் காட்டி தேர்தலிலும் வெற்றி பெறலாம் என நினைத்த அரசு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இரத்தக் கறை நீங்குவதற்குள் ஜனாதிபதித் தேர்தலையும் பின்பு பொதுத்தேர்தலையும் அதன் பின்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் நடாத்தியது. எல்லாத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் அரசாங்கத்தை தோற்கடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச் செய்துள்ளார்கள்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பினையே தங்களது அரசியல் சக்தியாக வெளிக்காட்டுவதால் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவையாக உள்ளதெனவும், அரசாங்கம் சொல்வதைப் போன்று எந்த நலன்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் சர்வதேச நாடுகள் நன்கு புரிந்துகொண்டதால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சர்வதேச நாடுகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி பேசுகின்றன.
எனவே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை நடைபெற இருக்கின்ற எல்லாத் தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பையே தமிழ் மக்கள் தெரிவு செய்து தமிழ் மக்களுக்கான அரசியல் பலத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நடைபெற இருக்கின்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விளையாட்டுக்கள் இன ஒற்றுமையைப் பேணுகின்றன. அந்த வகையில் நடைபெற்ற இந்த விளையாட்டும் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையைப் பேணுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இரண்டு அணிகளும் மிகவும் சிறப்பான முறையில் விளையாடியதை அவதானிக்க முடிந்தது.
மேலும் இந்த விளையாட்டுக் கழகங்கள் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment