
விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளில் கடும் போக்கானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2,000 முன்னாள் போராளிகளுக்கு எதிராக கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வழக்குத்தாக்கல் செய்யப்படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
போரின் முடிவின் போது சுமார் 11,500 போராளிகள் சரணடைந்தார்கள், அல்லது கைது செய்யப்பட்டனர். இவர்களில் சுமார் 3,000 பேர் இராணுவத்தினரால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் பேராசிரியர் பீரிஸ், தொடர்ந்தும் முகாம்களில் உள்ளவர்களில் 2,000 க்கும் குறைவானவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும், அடுத்த வருடத்தில் இவர்கள் மீதான நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக நியூயோர்க் வந்துள்ள அமைச்சர் பீரிஸ், அசோஷியேட்டட் பிரஸ் செய்தியாளரிடமே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
போர்க் காலத்தில் அரச படைகள் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்தார்.
"இருந்த போதிலும் ஜனாதிபதியால் கடந்த வருடத்தில் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்திக்கொண்டிருப்பதாகவும், யாராவது குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் ஆதாரங்கள் கிடைத்திருப்பின் அவர்கள் இலங்கை நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்காக நிறுத்தப்படுவார்கள்" எனவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வெளியிட்ட ஒளிநாடாவையும் இந்த ஆணைக்குழு பார்வையிட்டதாகத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நவம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment