
போரில் இறுதிக்கட்டங்களில் சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் பலவற்றை சிறிலங்கா அரச தொலைக்காட்சி மூலமே மேற்குலகம் திரட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியதையும் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்களில் ஒன்றாக ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கமே தாக்குதல் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதியில் - கனரக ஆயுதங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்த பின்னரும் – பொதுமக்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களை அரசாங்கத் தொலைக்காட்சியே வழங்கியுள்ளது.
இதுபற்றிய தகவல் பறிமாற்றக் குறிப்பு ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009 மார்ச் 11ம் நாள் கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதுவர் பிளேக் அனுப்பிய சிறிலங்கா நிலைமைகள் குறித்த 29வது அறிக்கையில் இதுபற்றிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
2009 மார்ச் 10ம் நாள் பாதுகாப்பு வலயத்தில் பலத்த பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுவதாகவும், அன்றைய நாள் 124 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 254 பேர் காயமுற்றதாகவும் ஐ.நா பிரதிநிதி தமக்குத் தெரியப்படுத்தியதாகவும் பிளேக் அனுப்பிய தகவலில் கூறப்பட்டுள்ளது.
அன்றைய நாள் பாதுகாப்பு வலயத்தில் 'மிகமோசமான நாள்' என்று பிளேக் தனது அறிக்கையில் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது.
ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்தி விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்திருந்த போதும்- புலிகள் நிலைகள் மீது சிறிலங்காப் படையினர் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தும் காணொலிக் காட்சியை அரச தொலைக்காட்சி அன்றைய நாளும் [மார்ச் 11] ஒளிபரப்பியுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரிஎன் தொலைக்காட்சியில் இந்தக் காணாலி ஒளிபரப்பப்பட்டதாகவும், இது பற்றி மறுநாளான மார்ச் 12ம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்கும் போது எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாகவும் பிளேக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment