இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழகத்தில் 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அஇதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்று ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.
தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி போட்டியிடுவது என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்த அடிப்படையில் அஇஅதிமுக தலைமையுடன் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தியது.
பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அஇஅதிமுக தலைமை தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அஇஅதிமுகவின் தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்து அஇஅதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் ஆட்சேபனையை தெரிவித்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சேபனையை அதிமுக சிறிதும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை தொடர்ந்து தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டே இருந்தது. பேச்சுவார்த்தை தர்மம் குறித்து அதிமுக தலைமை கவலைப்படவில்லை.
எனினும் உடன்பாடு காண மார்க்சிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. ஆனால் அஇஅதிமுக தலைமை மார்க்சிஸ்ட் கட்சியின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை. 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இடங்களைக் கூட ஒதுக்கீடு செய்ய அஇஅதிமுக தலைமை மறுத்தது. இந்த அணுகுமுறை மார்க்சிஸ்ட் கட்சியுடன் பொருத்தமான உடன்பாட்டிற்கு வர அஇஅதிமுக தலைமை தயாரில்லை என்பதையே உணர்த்தியது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபெற்றவுள்ள உள்ளாட்சித் தேர்தலை இடதுசாரி மற்றும் இதர ஜனநாயக கட்சிகளோடு இணைந்து சந்திப்பது என தீர்மானித்தது. இதனடிப்படையில் தேமுதிகவுடன் உடன்பாடு காண்பதென கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.
மேலும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக அல்லாத இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் தேமுதிக மார்க்சிஸ்ட் கட்சி அணியில் இணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதெனவும் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கப்டன் செய்தி


No comments:
Post a Comment