இலங்கை வான்பரப்பில் அமெரிக்க விமானப்படையின் 10 போர் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன் ஒன்று ஊடுருவிப் பறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இலங்கை ராடர்கள் கண்டு பிடிப்பதற்கு முன்னரே இந்திய ராடர்கள் அவதானித்துவிட்டதாகவும் இந்தியா இத் தகவல்களையும் தரவுகளையும் இலங்கைக்கு பரிமாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான சுமார் 9 போர் விமானங்கள் உட்பட ராடர் பொருத்தப்பட்ட அதி நவீன வேவு விமானம் ஒன்றும் இலங்கை வான் பரப்பினுள் அத்துமீறி நுளைந்து சென்றுள்ளது. இலங்கை வான்பரப்பிற்கு மேல் சென்ற இவ்விமானங்கள் மேற்கே மாலைதீவுகள் பக்கமாகச் சென்றதாவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துமீறல் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகத்தில் கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இன்று செய்திவெளியிட்டுள்ளது. இலங்கை வான்பரப்பில் அமெரிக்கப் போர்விமானங்கள் அவ்வப்போது ஊடுருவுவதாகவும், அத்தகைய சந்தர்ப்பங்களில் அவற்றை வெளியேறுமாறு தாம் கூறி வருவதாகவும் இலங்கை விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடுருவல் இலங்கைத் தீவை மிக அண்மித்ததாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
நேற்றைய தினம் ஊடுருவிய அமெரிக்க விமானங்களின் தொடர்புச்சாதனங்களை இடைமறித்துக் கேட்டபோது அந்த போர் விமானங்கள் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்டு வந்தவை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் இலங்கை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க கடற்படையின் ஏழாவது படைப்பிரிவின் ஜெட் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த போர் விமானங்களே இலங்கை வான்பரப்புக்குள் ஊடுருவியிருக்கலாம் என்று நம்புவதாகவும் சிறிலங்கா விமானப்படை அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
அண்மையில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கிளிநொச்சி சென்று வந்ததும் அதன் பின்னர் இந்த ராடர் பொருத்தப்பட்ட வேவு விமானங்கள் இலங்கை வான் பரப்பில் அத்துமீறியுள்ளதற்கும் ஏதாவது தொடர்புகள் இருக்குமா என்றகோணத்தில் இலங்கை புலனாய்வு தற்போது ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிலவேளைகளில் பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவுக்கு பறந்துசென்று ஏரியல் ஸ்கேன் என்று சொல்லப்படும் (நிலப்பரப்பை ஸ்கேன்) செய்யும் அமெரிக்க வேவு விமானத்துக்கு பாதுகாப்பு வழங்கவே ஜெட் விமானங்கள் ஒரு ஸ்குவாட்ரனாகச் செல்வது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் அமெரிக்கப் போர் விமானங்களின் ஊடுருவல் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் கருத்து வெளியிட மறுத்து விட்டதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் குறிப்பிட்டுள்ளது.


No comments:
Post a Comment