தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.திருமாவளவன் பேசியதாவது:
இருபத்தைந்து ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ஈழ விடுதலைக்கான குரல் எழுப்பப்படவில்லை. ஒரு சிலர் இங்கே அழைத்துவரப்பட்டு பேசப்பட்டார்கள். பேரணியில் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் மாநிலத்தில் தமிழ் ஈழ விடுதலைப்பற்றி ஆதரித்து பேசியது உண்டா. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். பாஜக ஆண்டபோதும் அதுதான் கொள்கை. காங்கிரஸ் ஆளுகிறபோதும் அதுதான் கொள்கை.
இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை பிரகடனப்படுத்திக்கொள்கிற பாஜக என்றைக்காவது அங்கே அழிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள் என்று கோபப்பட்டது உண்டா. அங்கே இடிக்கப்படுகின்ற கோயில்கள் இந்து கோயில்கள் என்று ஆத்திரப்பட்டது உண்டா.
பாஜக இந்த நாட்டை நான்கு முறை ஆளவில்லையா. என்றைக்காவது ஒருமுறையாவது அவர்கள் வெளியுறவுக் கொள்கையிலே மாற்றத்தை கொண்டுவந்தது உண்டா. ஒரு வாதத்திற்காக நான் சொல்லுகிறேன். இந்தியாவை ஆண்ட பாஜகவும் சரி, ஆண்டுக்கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் சரி, இது காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற பாஜக. அது பாஜக என்று அழைக்கப்படுகின்ற காங்கிரஸ் கட்சி. அவர்கள் வெளிப்படையான மதவாத சக்திகள். இவர்கள் மறைமுகமான மதவாதிகள். அவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். இவர்களின் கொள்கையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். ராஜபக்சேவின் கொள்ளையும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடும் தமிழ் ஈழம் கூடாது என்பதுதான்.
தமிழ் ஈழத்தை தமிழ்நாட்டில் ஆதரிப்பவர்கள் யார். இன்று சட்டமன்றத்தில் அம்மா தீர்மானம் நிறைவேற்றிவிட்டார். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று. எத்தனையோ தீர்மானங்கள் அப்படி நிறைவேற்றப்பட்டுவிட்டன. எல்லாம் அவை குறிப்புகளாகத்தான் இருக்கின்றன. நான் கேட்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவிலே தமிழ் ஈழம் தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா? அதிமுக நண்பர்களை பார்த்து நான் கேட்கிறேன். அம்மாவை பார்த்து நான் கேட்கிறேன்.
அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த இனம் நசுக்கப்பட்டிருக்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிறது. அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே மீண்டும் ஒற்றை ஆட்சியின் கீழ் சமஉரிமை என்பது பொருந்தாது. அது நடைமுறைக்கு ஒத்துவராது. ஆகவே அங்கு புலிகள் இல்லை என்று நீங்கள் சொல்லுகிறபடி நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் புலிகள் அங்கே இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களின் தேவை தமிழ் ஈழம் தான். எங்களின் ஒரே கோரிக்கை தமிழ் ஈழம்தான். வெளிப்படையாக அந்த தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக முன்வருமா.
எம்ஜிஆர் தலைமையில் இருந்த அதிமுக வேறு. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல் வேறு. ஆனால் அம்மா தலைமை ஏற்ற பிறகு, தமிழ் ஈழ விடுதலை தொடர்பாக என்ன நிலைப்பாடு.
தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லுகிற திமுக. பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் திமுக இன்று ஒரு சூழ்நிலை கைதி. தனி ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றினாலும், அதிமுகவின் நிலை என்னவோ அதுதான் திமுகவின் நிலை. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


No comments:
Post a Comment