முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கொலை வழக்கின் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி திகார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியைப் பார்க்கும் நோக்கில் அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அதன்போது காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருடனான சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். அதன் பின் திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியையும் சந்தித்திருந்தார்.
நேற்று நண்பகல்; தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லி விஜயத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அதன் பின்னர் மாலையில் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன்போது கருத்துத் தெரிவித்த கலைஞர் கருணாநிதி, இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக வழங்கப்படவில்லை என்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டியிருக்கிறேன், அத்துடன் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவதையும் ஆதாரங்களோடு பிரதமருக்கு விளக்கியிருக்கிறேன்.
இவற்றோடு தூக்கு தண்டனை பெற்றிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக சிறையிலே வாடிக்கொண்டிருப்பதால் இதுவரையில் அனுபவித்து வந்த தண்டனை போதுமானது என்ற முறையில் அவர்களின் உயிர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.


No comments:
Post a Comment