ரொறன்ரோவில் நடக்கவிருக்கும் பொங்குதமிழ் நிகழ்வு சிறப்பாக நடந்தேறிட நோர்வே ஈழத்தமிழர் அவையும் நோர்வே வாழ் தமிழர்களும் கனடா நாட்டை நோக்கி எண்ண அலைகளை சிதறடிக்கவிட்டு வருகிற 29.10.11 ஆம் நாளிர்க்காய் காத்து நிற்கிறோம்.தாயகம்! தேசியம்! தன்னாட்சி! என்ற முழக்கம் உலகமெங்கும் கேட்க வேண்டும். இவ்வுலகில் பிற இனம் போலத்தான் நாங்களும் என்று உணர மறுக்கும் கயவர் கூட்டம் தமிழரின் முழக்கத்தில் நாணி நிற்க வேண்டும். எம் இனம் யாருக்கும் எதிராய் நின்றதில்லை. யாரையும் அழித்ததில்லை. இன்றும் கூட யாருக்கும் எதிராய் நின்றதில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்!" என்ற எம்மை அழிக்க எத்தனை எத்தனை கரங்கள் ஒன்று சேர்ந்தன.
தமிழர்களே நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். "அழித்தவனே, எம்மை அழித்தால் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம். மீண்டும் மீண்டும் உயிர் பெறுவோம். எம் சந்ததிக்கு நிலையான வாழ்வு கிட்டும் வரை உயிர் பெறுவோம். எம் நிலம் தன்னாட்சி பெறும் வரை உயிர் பெறுவோம். எம் மக்கள் சுதந்திரமாய் வாழும் வரை எம் மொழி எம் நிலத்தில் ஆட்சியில் நிற்கும் வரை உயிர் பெறுவோம்.
வீழ்ந்து வீழ்ந்து விதையாய் வீழ்ந்து உயர்ந்து உயர்ந்து மரமாய் உயர்ந்து விடியல் நோக்கி களம் காண்போம்" என்று ரொறன்ரோ பொங்கு தமிழ் பெரு நிகழ்வில் முழக்கமிடுவோம். விண்ணதிர மண்ணதிர முழக்கமிடுவோம்.
எமது உரிமைக்காய் நாம் முழங்காமல் யார் முழங்குவது? "நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை விலங்கினைத் தவிர" என்றானே மார்ட்டின் லூதர் கிங் அதுபோல முள்ளிவாய்க்கால் பெரும் சோகத்தையே சந்தித்தாகிவிட்டது, இனி இழப்பதற்கு வேறென்ன இருக்கிறது. ஆனால் பெறுவதற்கு நாடுண்டு. எம் இனம் வாழ வழியுண்டு. எம் மொழி நிலைக்க வழியுண்டு. ஒன்று சேருங்கள் ஒன்றாய் முழக்கமிடுங்கள். எமது என்ன வேண்டும் என்பதை நாம்தான் சொல்லவேண்டும் அதையும் உரக்க சொல்லவேண்டும். இவ்வுலகம் செவி மறுக்கும் வரை சொல்ல வேண்டும்.
எமது ஒற்றை முழக்கம், "தாயகம்! தேசியம்! தன்னாட்சி!"
பொங்குதமிழே! பொங்குதமிழே!
எம் இனத்தின் விடியலுக்காய் பொங்குதமிழே!
அழிந்த இனம் மீண்டு வாழ்ந்திட பொங்குதமிழே!
அழியா இனமிது என்றுரைத்திட பொங்குதமிழே!
பகைவர் நடுங்கிட பொங்குதமிழே!
தமிழை ஆராதிக்க பொங்குதமிழே!
தமிழரை வாழ வைக்க பொங்குதமிழே!
தமிழீழம் மலர்ந்திட பொங்குதமிழே!
ரொறன்ரோவில் நடக்கவிருக்கும் பொங்கு தமிழ் நிகழ்வு எமது இனத்தின் இருப்பை இவ்வுலகிற்கு தெரிவிக்கவிருக்கும் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வென கருதி தமிழர்களே ஆயிரமாயிரமாய் அணித்திரள்வீர்!
நோர்வே ஈழத்தமிழர் அவை, நோர்வே


No comments:
Post a Comment