ஈழப்போரின் இறுதிப் பகுதியில் முன்னேற்பாட்டின் பிரகாரம் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற புலித்தேவன், நடேசன் உள்ளிட்டவர்களை எப்படி நடத்தியதோ அதே போன்றே லிபியாவின் புரட்சிப் படைகளினால் கைது செய்யப்பட்ட கடாபியும் உயிரோடு கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய பின்பே இக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
கடாபியின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையின் மனிதவுரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையிடம் பல தரப்பும் முறையிடத் தொடங்கிய நிலையிலேயே சிறீலங்காவில் இடம்பெற்றதும் கடாபிக்கு இடம்பெற்றதும் ஒரே வகையான மீறல்களே என மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் ஆசியப்பிரிவின் இயக்குனர் பிராட் அடம்ஸ் பி.பி.சிக்குத் தெரிவித்திருந்தார்.
இந்த லிபியப் புரட்சிப்படைக்கு ஆதரவான வான் தாக்குதல்களிலும், சூட்டுத் தாக்குதலிகளிலும் நேட்டோ நாடுகளைச் சார்ந்த படைகளே ஈடுபட்டதுடன், அவைகளே இந்தப் புரட்சிப்படையின் வழிகாட்டியாகவும் இருந்த படியால் கடாபியின் கொலை மீதான குற்றச்சாட்டு அவர்கள் மீதும் திணிக்கப்படும் என்ற அச்சமே அவை இனிச் சிறீலங்காவின் யுத்தக்குற்ற விவகாரங்களில் பெரிதாக குரல் எழுப்பமாட்டா என்ற சந்தேகத்தைக் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அங்கத்துவ நாடுகளாகக் கொண்ட நேட்டோவில் அவுஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா என்பனவும் எல்லை தாண்டிய அங்கத்துவ நாடுகளாக இருக்கின்றன. இந்த நேட்டோ அமைப்பின் லிபிய விடுதலைக்கான போரிற்கான நேரடி உதவியே புரட்சிப்படைகளை கடாபியை ஆட்சியிலிருந்து அகற்ற வழி செய்தது.
இந்த நிலையில் லிபியப் புரட்சிப் படைகளின் பிரதமர் முகமட் ஜப்ரில் சிர்டி என்ற கடாபியின் சொந்த நகரில் நடந்த சண்டையில் தலையில் குண்டுபாய்ந்து கடாபி கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். எனினும் அவரைக் கைது செய்த புரட்சிப் படை வீரர் தான் அவரை கழிவுநீரோடும் கால்வாய் ஒன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்ததாக செய்தியாளர்களிற்குத் தெரிவித்தார்.
அதனை உறுதிப்படுத்துவது போல வெளிவந்த வீடியோக் காட்சிகள் கடாபி கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதையும், வாகனம் ஒன்றில் உயிரோடு ஏற்றப்படுவதையும், இழுத்துச் செல்லப்படுவதையும் பதிவு செய்திருந்தன. அத்தோடு கைது செய்த புரட்சிப்படை வீரர் கடாபியின் தங்கத் துப்பாக்கியை வைத்து ஆர்ப்பரிக்கும் படத்தையும் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடாபி தன்னைச் சுட வேண்டாம் என்று மன்றாடியதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையிலேயே கடாபியின் கொலை ஒரு யுத்தக் குற்றவிசாரணை என்ற கோதாவிற்குள் இட்டுச்செல்லப்பட பல தரப்பாலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மனிதவுரிமை கண்காணிப்பகத்தின் ஆசியப்பிரிவுக்கான இயக்குனர், கடாபி எவ்வளவு கொடியவராகவும் இருந்திருக்கலாம். ஆனால் அவரைக் கைது செய்தபின் உரியவகையில் கையாண்டிருக்க வேண்டும் என்றும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக்கூடாது என்றும் தெரிவித்ததோடு,
உடனடியாக இது யுத்தக் குற்றமா இல்லையா என்பதைச் சொல்லமுடியாவிட்டாலும் இது யுத்தக் குற்ற விவகாரமாக மாறும் சாத்தியம் பலமாக உள்ளதையும் தெரிவித்துள்ளார்.
எனவே புரட்சிப்படைகளுடன் களத்தில் நின்று போராடிய நேட்டோ நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு இலங்கை யுத்தக்குற்ற விவகாரத்தை இனி அடக்கி வாசிக்கவும் முயலும் என்பதை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இது குறித்துக் கருத்து அறிவதற்காக சிறீலங்கா அரசின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல்லவைத் தொடர்பு கொள்ள பி.பி.சி.யின் சிங்களச் செய்திச் சேவையினர் பல தடவைகள் முயன்றபோதும் ஹெகலிய ரம்புக்வெல்லவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.


No comments:
Post a Comment