
கொமன்வெல்த் அமைப்பில் 11 நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு மற்றும் மனிதஉரிமைகளுக்கான ஆணையாளர்‘ பதவியை உருவாக்குவது தொடர்பான யோசனையை பேர்த் மாநாட்டில் சிறிலங்கா கடுமையாக எதிர்க்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அவுஸ்ரேலியா புறப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முடிவில் அடுத்த கூட்டத்தை நடத்தவுள்ள சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவுஸ்ரேலியப் பிரதமர் ஜுலியா கிலாட்டிடம் இருந்து கொமன்வெல்த் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.
அத்துடன் 2009ல் போர்ட ஒவ் ஸ்பெயினில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் முன்னாள் மலேசிய பிரதமர் தலைமையில் கானா, ஜமைக்கா, பாகிஸ்தான், உகண்டா, அவுஸ்ரேலியா, மொசாம்பிக், பிரித்தானியா, கயானா, கனடா, கரிபாதி ஆகிய 11 நாடுகளின் வல்லுனர்கள் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவியை உருவாக்கும் யோசனை குறித்து இந்த மாநட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
சுதந்திரமான இந்தப் பதவியை கொமன்வெல்த் அமைப்பில் உருவாக்குவதற்கு சிறிலங்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பதவியை உருவாக்கும் முடிவை உடனடியாக எடுப்பதற்கு பிரித்தானியா, கனடா, நியுசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இந்த ஆணையாளர் பதவி தமக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தை விடுதலைப் புலிகளின் பரப்புரைகளை ஊக்குவிக்கவே பயன்படுவதாகவும், இதுவே இந்தப் பொறிமுறை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு சான்றாக இருப்பதாகவும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற கொமன்வெல்த் நாடுகளின் முக்கிய அரசியல்கட்சிகளின் ஆதரவை விடுதலைப் புலிகள் பெற்றிருப்பதாகவும், இதனால் இந்த ஆணையாளர் பதவியை உருவாக்குவது ஆபத்தானது என்று கருதுவதாகவும், சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.puthinappalakai


No comments:
Post a Comment