கடந்த 2000 ம் ஆண்டு தனது வீட்டிலிருந்த சமயம் படுகொலை செய்யப்பட்ட நிமல்ராஜனின் 11வது ஆண்டு நிறைவு நாள் நிகழ்வில் தென்னிலங்கை ஊடகவியலாளர்களான சீதா ரஞ்சனி, ராவய செய்தி ஆசிரியர் வசந்த ருகுணுகே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைகளை ஆற்றினர். அத்துடன் யாழ்.மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் சிறப்புரையாற்றிய தென்னிலங்கை ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி தனதுரையில், ஊடகப்பணிக்காக இலங்கையில் இதுவரை கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருக்கின்றனர்,
இதன் மூலம் தமிழர்களின் தகவலறியும் சுதந்திரம், கருத்துக்களைக் கொண்டிருக்கும், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றமையும், அவற்றைக் கொண்டிருக்கும் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலும் சரித்திரத்தில் மிகமோசமானதாகும்.
இதுவரையில் 60 தமிழ் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், அவ்வாறு அவர்கள் கொல்லப்படக் காணரம், உண்மைகள் வெளிவரக் கூடாது என்பதற்காகவே, ஆனால் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும், உண்மை வெளிக்கொணரப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.
எனவே இதுவொரு போராட்டம். இந்தப் போராட்டத்தில் இருந்து வெற்றிபெற ஊடகவியலாளர்கள் ஒன்றுபட வேண்டும், என்றார்.


No comments:
Post a Comment