காலம் தமிழ் மக்களிற்கு சமகாலத் தெரிவாகக் காட்டியுள்ள தமிழ் கூட்டமைப்புத் தலைமையை மேற்குலகு அரவணைத்துச் செல்வதையிட்டு உலகத் தமிழர்கள் பெருமையடைய வேண்டும் எனவும் இந்தப் பயணத்தை வெற்றியை நோக்கி நகர்த்த தம்மாலான ஆதரவை வழங்க வேண்டுமெனவும் கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்பு வெளியிட்டுள்ள வரவேற்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.அமெரிக்கா இந்த விஜயத்தை ஒரு உயரிய இராஜாங்க விஜயமாக அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் திருமதி கிலாரி கிளின்டன் உள்ளிட்ட முக்கிய முடிவெடுக்கும் அதிகாரிகளைச் சந்திப்பதானது தமிழர்களின் வரலாற்றில் புதியதொரு விடயம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளதுடன்,
இந்த விஜயம் இன்னமும் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசிற்கு இனியும் மேற்குலகம் வெறுமனே பார்வையாளராக இருக்காது என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு விசா வழங்குவதைத் தவிர்த்து வந்த கனடியக் கொள்கை வகுப்பாளர்கள் கூட இம்முறை அவர்களிற்கு விசா வழங்கியதோடு மாத்திரமல்லாமல் கனடியத் தலைநகரில் மேற்கொள்ளவுள்ள சந்திப்புக்களிற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்ததானது கனடாவின் அண்மைக்காலச் செயற்பாடுகளில் புதியதொரு வரவு என்றும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான பார்வையைத் திருப்புகிறது என்பதைக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு,
கனடாவின் இந்த மனமாற்றத்தை வரவேற்று கனடியத் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தங்களால் இயன்ற ஆதரவை வழங்கி எமது இனத்தை அடுத்த பரிமாணத்தை நோக்கி நகர்த்த வேண்டுமெனவும் கேட்டுள்ளது.
அமெரிக்கா வந்து முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்ட பின்பே கனடாவிற்கு இவர்களது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும் கனடாவிற்கான பயணத்தின் பிற்பாடும் வாசிங்டனிற்கு வந்து போகும் படி மேலதிக அழைப்பை அமெரிக்கா தற்போது விடுத்துள்ளதானது பத்தோடு பதினொன்றாக விடமுடியாத ஒரு பயணமாக இது அமைகிறது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு,
காலமும் வரலாறும் எமக்குத் தரும் வாய்ப்புக்களை நாங்கள் ஆராயாமல் விட்டால் அதுவே எமது இனத்திற்கான ஒட்டுமொத்த அழிவிற்கான காரணியாக அமைந்து விடும் என்பதை கருத்திற் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளிற்குத் புலம்பெயர்ந்த மக்கள் தங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
தமிழர்களின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஒரு காலகட்டத்தில் மேற்குலகம் தமிழர்களின் ஜனநாயகத் தலைமையை தனது அரவணைப்பிற்குள் கொண்டு வருவதற்கு உரம் சேர்க்க புலம்பெயர்ந்த அமைப்புக்களால் மாத்திரமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து அனைத்து அமைப்புக்களும் ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டுமெனவும் கேட்டுள்ளது.
கனடாவில் தமிழர்களிற்கான ஒரு கூட்டுத்தலைமைக்கான தேடலில் கனடியத் தமிழர்கள் ஈடுபட்டுள்ள ஒரு தருணத்தில் கனடாவிற்கு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய முயற்சிக்கான உந்துதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி புலத்தை களத்தின் நிஜ நிலவரங்களிற்கு ஏற்றவகையில் உண்மையின் பக்கம் திருப்பிச் செல்லும் என்று நம்புவதாகவும் கனடியத் தமிழ் கன்சவேட்டிப் அமைப்பு [ www.constam.ca ]தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment