தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் 22 அன்று அவர் ஆஜராவதற்கு நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனய்யா ஒப்புக் கொண்டார்.ஜெயலலிதா 1991-96ல் முதல்வராக இருந்தபோது, முறைகேடாக 66 கோடி ரூபாய் அளவு அவர் சொத்துக் குவித்த்தாக, பின்னர் வந்த திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அது பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்து, பெங்களூருக்கும் மாற்றப்பட்டு, அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தின் முன் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
நீதிமன்றம் சென்று அரச தரப்பு வழக்கறிஞர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய நிலையில், கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய இரு நாட்களில், அவர் நீதிமன்றம் சென்று பதில்களை அளித்தார்.
ஆனால் அவருக்காக தயாரிக்கப்பட்டிருந்த 1339 கேள்விகளில் 567 கேள்விகளுக்குத்தான் அவ்விருநாட்களில் தமிழக முதல்வரால் பதிலளிக்கமுடிந்தது. பின்னர் விசாரணை நவம்பர் 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவேண்டுமெனக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வசதியானதொரு நாளில் ஆஜராவது குறித்து சிறப்பு நீதிமன்றம் முடிவுசெய்துகொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
அதன்படி செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு சிறப்புநீதிமன்றத்தின் முன் வந்தபோது, ஜெயலலிதாவின் வழக்கறிஞர், முதல்வர் என்ற முறையில் அவர் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறது. வெள்ள நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. எனவே நவம்பர் 22 ம் தேதி ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு வர அனுமதிக்கவேண்டும் எனக்கோரினார். தேவையானால் அதற்கடுத்த நாளும் தமிழக் முதல்வர் நீதிமன்றம் வருவார் என்றார் வழக்கறிஞர். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கு நவம்பர் 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.


No comments:
Post a Comment