தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த பிரிந்து சென்ற கருணா வெளிநாடுகளுக்குச் சென்று புலிகள் அமைப்புக்கு எதிராகப் பிரசாரம் செய்த போது அதனை இலங்கையிலிருந்து ஆதரித்துப் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான், இன்று கருணாவுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய விஜயத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.புலிகளுடன் தனக்குப் பிரச்சினைகள் என்றால் அதனை உள்ளுரில் அவர் பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதனை விட்டு விட்டு ஏன் அவர் வெளிநாடு சென்று புலிகளுடனான பிரச்சினைகள் குறித்துப் பேசியிருக்க வேணடும்? இந்த நிலையில் இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐரோப்பிய விஜயத்தைக் கொச்சைப்படுத்துவது கேவலமான நடவடிக்கை என டெலோ இயக்க அரசியல் பொறுப்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஈழநாதம் இணையத்துக்குத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கூட ஒரு தடவை இந்தியாவுக்குச் சென்று ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த விடயத்தை அவர் எவ்வாறு இப்போது நியாயப்படுத்தப் போகிறார்.
இவர்கள் இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இரு அணியாகச் செயற்பட்டபோது இடம்பெற்ற மோதல்களின் போது ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்படியெல்லாம் கீரியும் பாம்புமாக இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்ப்பலிக்குக் காரணமான இவர்கள் இன்று கேக்கும் கோப்பியும் குடித்துக் கொண்டு கூட்டமைப்பை விமர்சிப்பது கேலிக் கூத்தான விடயம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment