கச்சத்தீவையொட்டிய பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம்பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் ஒரு கொடிய தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கைப் படையினர் தங்களது படகுகளை கொண்டு மோதியதுடன் கற்கள், உருட்டுக் கட்டைகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றைக் கொண்டும் தாக்கியதில் பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இது கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட 2ஆவது தாக்குதல் ஆகும். இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த சூன் மாதம் முதல் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தொடங்கியதிலிருந்து இன்றுவரை அவர்கள்மீது சிங்களப் படையினர் 20க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மீனவர்கள் கடலுக்குச் சென்று இலங்கைப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகாமல் திரும்பியதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இலங்கைப் படையினரின் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த ஆட்சியில், மீனவர்களை காக்க நடவடிக்கை எடுக்காமல் பிரதமருக்கு கடிதம் எழுதுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று அப்போதைய முதல்வரை ஜெயலலிதா விமர்சித்தார்.
ஆனால் தற்போது அவரும் அதே கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகிறார். கடந்த சில மாதங்களில் பிரதமருக்கு முதலமைச்சுர் ஜெயலலிதா நான்கிற்கும் மேற்பட்ட முறை கடிதம் எழுதிய போதிலும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீனவர் பிரச்சனைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதால் எந்தப் பயனும் இல்லை என்று ஏற்கெனவே நான் பலமுறை கூறியுள்ளேன். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்திய போதிலும் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக இலங்கை கடற்படையினருக்கு உதவிகளை வழங்குவது, கூட்டுப் பயிற்சி நடத்துவது, காமன்வெல்த் மாநாட்டை நடத்த உதவுவது என இலங்கை அரசுக்கு ஏராளமான சுலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
த்தகைய சூழலில் மீனவர்களைக் காக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டே இருக்கப்போகிறாரா? அல்லது கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதால்எந்தப் பயனும்ஏற்படாது என்பதை புரிந்து கொண்டு, தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் கலந்து பேசி மக்களைத் திரட்டி போராட முதலமைச்சர் முன்வர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment