எங்களின் உயிர் இந்த அளவுக்கு உதாசீனப்படுத்தப்படும் என நாங்கள் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. இனி, வழக்கம்போல் தேதி குறிக்கப்படும். தினசரி நரகங்கள் தீர்மானிக்கப்படும். காப்பாற்றப்படுவோமா... கைவிடப்படுவோமா என உயிரும் உடலும் பட்டிமன்றம் நடத்திப் பதற்றத்தைக் கிளப்பும். ஆனாலும், அடுத்த கட்ட விசாரணையில் எங்களின் ஆயுள் காப்பாற்றப்படும் என இந்தக் கணத்திலும் நம்பி நிற்கிறோம்.
கடந்த முறைபோலவே எங்களின் உயிர் காக்க மொத்தத் தமிழகமும் கைகோர்க்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்காகத் தீக்குளித்து மடிந்த எங்கள் தங்கை செங்கொடியை இந்தக் கணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். 'அவர்கள் தவறு செய்யவில்லை’ என்று உறுதியாக நம்பிய அந்தத் தங்கை தன்னை மாய்த்துக்கொண்ட நிலையில், நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன சாதித்துவிடப் போகிறோம்? தங்கையைப் பின்தொடர்ந்து சாவதில் எங்களுக்கு சந்தோஷம்தான்.
ஆனால், கயிறு எங்களின் கழுத்தை இறுக்கும் முன் என்னுடைய முழுக் குமுறலையும் இறக்கிவைக்க வேண்டும். காங்கிரஸ்காரர்கள் சொல்வதைப்போல் நடந்த படுகொலை மறக்க முடியாதது. மன்னிக்க முடியாததுதான். ஆனால், அந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதைப்பற்றி மனசாட்சியோடு விவாதிக்க ஏன் யாருமே முன்வருவது இல்லை?
உண்மையாகவே ராஜீவ் காந்தி மீது ஆத்மார்த்தமான அன்பு எந்தக் காங்கிரஸ்காரர்களுக்காவது இருந்திருந்தால், அவர் மரணத்தைத் தன் வீட்டு இழவாக எண்ணித் துடித்திருந்தால், நிச்சயம் எங்களை வேலூர் சிறையில் வந்து சந்தித்து இருக்கலாம். 'ஏனடா எங்களின் தலைவனைக் கொன்றீர்கள்?’ என நெஞ்சு குலுங்க எங்களின் சட்டையைப் பிடித்து உலுக்கி இருக்கலாம். ஆனால், ஒரு காங்கிரஸ்காரருக்குக்கூட எங்களைச் சந்திக்கும் தைரியம் ஏனய்யா இல்லாமல் போயிற்று?
இந்தியாவின் இளைய சக்தியாக வளர்ந்துவந்த ராஜீவ் காந்திக்கு யார் எதிரிகள்? எதிர்ப்பை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன பகை? செஞ்சிவப்பு முகமும், சிறுபிள்ளைச் சிரிப்புமாக வலம் வந்த அவரைச் சுக்குச் சுக்காகச் சிதறடிக்க சதிகாரர்களுக்கு எப்படி மனம் வந்தது?
''இலங்கையில் நடந்த கொடுமைகளுக்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்பதால், பெண்கள் குழுவின் மத்தியில் அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு பலமாக இருந்தது. இதை மூன்றாவது குற்றவாளி முருகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்...'' - இவை ராஜீவ் காந்தி வழக்கில் நீதிபதி அவர்கள் எழுதி இருக்கும் வார்த்தைகள்.
என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டது என்பதை மறுபடியும் சொல்லி, பரிதாபத்தை நீட்டிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், எனது வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் மேற்கண்ட வரிகளை, மறுபடியும் படித்துப் பாருங்கள். ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படை அங்கே போய் அமைதியைத்தானே நிலைநாட்டி இருக்க வேண்டும்? அசிங்கங்களையும் அக்கிரமங்களையும் நிறைவேற்றுவதற்குப் பெயர்தான் அமைதிப் படையா?
எங்கள் மண்ணில் அவர்கள் நிகழ்த்திய கோரங்கள் கொஞ்சநஞ்சமா? சிங்களப் படைகளின் குரூரங்களுக்கு நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அன்றைக்குத்தானே அந்தப் படைகள் நிரூபித்துக் காட்டின. திரும்பிய பக்கம் எல்லாம் ஓலம்... ஆண்களைக் கண்டால் அடித்துத் துவைப்பதும், பெண்களைக் கண்டால் துரத்திச் சுவைப்பதும்தான் அவர்களின் ஒரே வேலையாக இருந்தது என்பதற்கு எமது மண்ணில் அநேக ஆதாரங்கள் உண்டு!
மரணம் என்கிற கத்தி எங்களின் தலைக்கு மேலாகத் தொங்கியபடி இருக்கிறது. இந்தக் கணத்திலும் அங்கே அமைதிப் படை நிகழ்த்திய கொடூர மரணங்களை எண்ணிப் பார்க்கிறேன். இனம், மொழி பாராமல் குழந்தைகளைக்கூட குருவிகளைப்போல் சுட்டு வீழ்த்திய அமைதிப் படையின் குரூரத்தை எத்தனை காலம் கடந்தாலும் சகிக்கவோ, மன்னிக்கவோ முடியுமா?
உங்கள் குழந்தையின் தலையில் ஷூவை வைத்து ஒருவன் நசுக்குகிறான். திமிற முடியாத கட்டுக்குள் நீங்கள் சிதைக்கப்படுகிறீர்கள். உங்களின் வலியை சட்டை செய்ய முடியாத அளவுக்கு குழந்தையை நசுக்கி எறிகிறது இராணுவப் படை. ஒரு சிகரெட்டைக் காலில் போட்டு அணைப்பதுபோல் ஈழத்து சிசுக்களின் உயிர்கள் அணைக்கப்பட்டன.
நஞ்சுக்கொடிகூட குழந்தையை இறுக்கிவிடக் கூடாது எனக் கர்ப்ப காலத்திலேயே மிகக் கவனமாக இருப்பவர்கள் எங்களின் தாய்மார்கள். சிதைக்கப்பட்ட சிசுக்களை அலறலோடு கண்ணுற்ற பெற்ற வயிறுகளில் எத்தகைய வைராக்கியம் கூடு கட்டி இருக்கும்? வாசல் மண்ணை வாரி இறைத்து அவர்கள் இட்ட சாபம் அமைதிப் படையை அனுப்பியவர்களுக்குக் கேட்டிருக்குமா?
மிகப் பெரிய கொடூரங்களை நிகழ்த்துபவர்களின் பின்னணியில் இருக்கும் ஒரே காரணம் என்ன தெரியுமா? இயலாமைதான்!
எதையும் செய்யத் துணிகிற துணிச்சல், கையறு நிலையில்தான் மனதுக்குள் கருவாகிறது. இந்தியாவின் பலம் பொருந்திய தலைவராக உருவெடுத்த ராஜீவ் காந்தியை சுக்கு நூறாகச் சிதைக்க முடியும் என அன்றைய காலகட்டத்தில் யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா? அடுக்கடுக்கான பாதுகாப்புகளைக் கடந்து அவரை நெருங்கி இருக்க முடியுமா? எங்கே வருவார்... எங்கே போவார் என்பதை எல்லாம் உளவுத் துறையே கணிக்க முடியாத நிலையில் மிக கவனமாகத் திட்டமிட்டு அவரை எப்படித் தீர்த்துக் கட்டினார்கள்?
அரசு ஆவணம் 81-ல், ''இலங்கையில் இயக்கத்தினர் மீது இந்திய அமைதிப் படையினர் செய்த கொடுமைகளுக்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்பதினால், அவரைப் பழிவாங்கும் எண்ணம் இயக்கத்தினருக்கு இருந்தது...'' என்று நான் சொல்லியதாக எழுதப்பட்டு உள்ளது. அதில், இயக்கப் பெண்கள் குழுவைப்பற்றி நான் பேசியதாக இல்லை. மேற்கண்டவாறு எழுதியதன் மூலம் 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் காந்தி கொலை குறித்து எனக்குத் தெரிந்துவிட்டது என்று மறைமுகப் பொருள்படுகிறது.
ஏனென்றால், 1991 மார்ச் மாதம், சிவராசன் என்னிடம் மாலை அணிவிக்க ஒரு பெண் வேண்டும் என்று கேட்ட சமயத்தில்தான், எனக்கு மேற்படி தோன்றியதாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால், இந்த இடத்தில் 7.5.91 தேதிக்கு முன் சிவராசன், சுபா, தாணு ஆகியோர் தவிர யாருக்கும் சதி குறித்து தெரிந்து இருக்கவில்லை என்று நீதிபதிகளே சொல்லி இருக்கிறார்கள்.
இயக்கத்தினர் மீது பழியை ஏற்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் என்னுடைய வாக்குமூலம்(?) என ஏதேதோ கற்பனைக் கதைகளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள், மிக முக்கிய இடங்களில் வசதியாக அந்த வாக்குமூலத்தை மறந்துவிட்டு கதை பரப்புகிறார்கள்.
பக்கம் 140-ல், ''1991 மே மாதத்தின் முதல் வாரத்தில் 'இரண்டு பெண்களைக் கூட்டி வந்து இருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்க ஓர் இந்தியப் பெண் தேவை’ என ஏ-3 முருகனிடம் சிவராசன் சொன்னார்...'' என எழுதப்பட்டு உள்ளது.
இப்படி ஒரு கருத்துப் பகிர்தல் எனக்கும் சிவராசனுக்கும், 1991 மே மாதத்தில் அதுவும் குறிப்பாக... சுபா, தாணு 2.5.91 அன்று இங்கு வந்த பின்னர் நடந்தாக எவ்வித சாட்சியமும் சான்றும் எங்குமே கிடையாது.
அரசு ஆவணம் 81-ல், ''1991 மார்ச் மாதத்தில் எதிர்காலத்தில் நல்லுறவினை வளர்க்க ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க ஓர் இந்தியப் பெண் தேவை என சிவராசன் கேட்டார்...'' என்றும், ''1991 ஏப்ரல் முதல் வாரத்தில் சுபா, தணு என்கிற பெண்களைக் கூட்டிவரப் போவதாகவும், அவர்களுடன் கூடச் சென்று வேலையை முடிக்க (இலங்கைப் பெண்கள் எனத் தெரியாதிருக்க) ஒரு பெண் தேவைப்பட்டது. அதற்கு நளினியைப் பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது...'' என்று மட்டுமே எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த இரண்டு பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், அந்த வேலை 'மாலை அணிவிப்பது’ என்று வெளிப்படையாக உள்ளது. அதே நேரம், அதில் உள்ள முக்கிய முரண்பாட்டினையும் கவனிக்காமல் இருக்க முடியாது. முதல் பகுதியில், இந்தியப் பெண்ணே நேரடியாக மாலை அணிவிப்பதாக உள்ளது.
இரண்டாவது பகுதியில், இரு இலங்கைப் பெண்கள் மாலை அணிவிக்க அவர்களது அடையாளம் தெரிந்துவிடாமல் இருக்க மறைப்புக் கொடுத்து உதவுவது. முதல் பகுதிக்கு நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னதாக உள்ளது. இரண்டாவது பகுதிக்கு நான் உடன்பட்டதாக எங்கும் குறிப்பு இல்லை. 'தீர்மானிக்கப்பட்டது’ என்று மட்டுமே எழுதி இருக்கிறார்களே தவிர, யாரால் தீர்மானிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.
மேலும் அரசுத் தரப்பு வாதத்தில் சுபா, தணு என்ற இரு பெயர்களும் 2.5.91 அன்றுதான் முதன் முதலில் சூட்டப்பட்டது என்று இருக்கிறது. ஆனால், 1991 ஏப்ரல் முதல் வாரத்திலேயே சிவராசன் அந்த இரு பெயரால் குறிப்பிட்டு அவர்களைப்பற்றி சொன்னார் என இருக்கிறது. இந்தக் குளறுபடிகளை எல்லாம் நீதிபதிகள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?
இடைச்செருகலாக வழக்கு விவரங்களைச் சொன்னதன் பின்னணிக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் இருப்பது புலியா? இல்லை புலிகள் மீதான பழியா? என்பதை எல்லாம் சுட்டிக்காட்டும் நிலையில் நான் இல்லை. ஆனால், உற்ற உறவுகள் இரத்தத்தில் மிதந்ததைக் கண்ணுற்ற எவர் வேண்டுமானாலும், வெறியோடு அலைந்திருக்க முடியும்.
எத்தனை விதமான இழப்புகள்... எவ்வளவு துயரங்கள்... சிங்களப் படைகளின் குரூரமே தேவலாம் என்கிற அளவுக்கு பலாத்காரங்கள்... கொலைகள்... அதில், பாதிக்கப்பட்ட ஈ எறும்புக்குக்கூட பழிவாங்கும் எண்ணம் உருவாகி இருக்கும். அப்படி இருக்க, ரத்தமும் சதையுமாய் மண்ணையும் மரத்தையும் நேசித்த எங்களின் உறவுகள், அமைதிப் படைக்கு எதிராக எப்படித் துடித்து இருப்பார்கள்? அதை ஏவிய ராஜீவ் காந்தி மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருந்திருப்பார்கள்? பழிவாங்கும் வெறியை மடியில் கட்டியபடி அமைதிப் படையை விரட்டத் தங்களின் உயிரையே தீய்த்திருப்பார்கள்?
மடியில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்த தாணுவுக்கு உயிர் வாழும் ஆசை இருந்திருக்காதா? இந்த மண்ணைவிட்டு மறையப்போகிறோமே என்கிறத் தவிப்பு கடைசிக் கணத்திலும் அவருக்கு ஏற்படாமல்போனது ஏன்? இந்தக் கணத்திலும் ராஜீவ் கொலையை நான் துளியும் நியாயப்படுத்தவில்லை. 'கொலைக்கு கொலையே தீர்வு’ என்கிற கோட்பாடு மனித வர்க்கத்துக்குக் கூடாது. ஆனாலும், சிலர் சிந்தும் கண்ணீருக்குக் காரணமே, அவர்கள் பலருக்கும் விதைத்த கண்ணீர்தான் என்பதை ஈழத்துப் பிறப்பெடுத்தவனாக சொல்ல வேண்டியது என் கடமை!
காயங்கள் ஆறாது...
நன்றி ஜூனியர் விகடன்


No comments:
Post a Comment