மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான ரஸ்யாவின் கஸ்பரோம் நிறுவனம் முன்வந்துள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
மன்னாரில் எரிவாயு உற்பத்தியில் கூட்டாக இணைந்து செயற்பட கஸ்பரோம் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருப்பம் வெளியிட்டிருந்தது.
கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பு வந்த கஸ்பரோம் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இந்தநிலையிலேயே மேலதிக நடவடிக்கைகள் குறித்த ஆய்வு செய்ய ரஸ்யாவில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
மொஸ்கோவில் உள்ள சங்காய் கூட்டுத்தாபன அமைப்பில் கடந்தவாரம் பங்கேற்ற சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்ச்ர் சுசில் பிறேம்ஜெயந்த கஸ்பரோம் நிறுவன பிரதிநிதிகளுடன் இதுதொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன்போது, சிறிலங்காவைச் சேர்ந்த கபொத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் எண்ணெய் அகழ்வுத் துறையில் பயிற்சிகளை வழங்குவதற்கான புலமைப்பரிசில்களை வழங்கவும் கஸ்பரோம் நிறுவனம் இணங்கியுள்ளது.
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் வளம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள எட்டுத் துண்டங்களில் ஒன்றில் கெய்ன் இந்தியா நிறுவனம் இரண்டு எண்ணெய்க் கிணறுகளை துளையிட்டு வருகிறது.
மேலும் இரு துண்டங்கள் சீனா மற்றும் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏனைய துண்டங்களில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு ரஸ்யாவின் கஸ்பரோம் நிறுவனமும், வியட்னாமின் பெற்றோவியட்னாம் நிறுவனமும் விருப்பம் வெளியிட்டுள்ளன.


No comments:
Post a Comment