பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்புப் பிரிவின் கீழுள்ள ரத்னா லங்கா என்ற பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் பல்கலைக்கழகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அவர் நேற்றுக் கூறியவை வருமாறு:
கடந்த இரண்டாம் திகதி முதல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ரத்னா லங்கா எனப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் ருஹுணு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், உப வேந்தர்கள் ஆகியோர் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளரின் இந்த நடவடிக்கையால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் அதிகரிப்பதற்கான வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டாம் திகதி ருஹுணு பல்கலைக்கழகத்தில் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதியில் தனித்தனி மாடிகளாகச் சென்று குறித்த பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 6 மாணவர்கள் மீது வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டது.
அதேவேளை, ஆண்கள் விடுதிகளில் நுழைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட அவர்கள், நாளை பெண்கள் விடுதிகளுக்கும் சென்று பிரச்சினை ஏற்படுத்தமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமா?
எனவே, பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இவர்களை உடனடியாக நீக்கி, ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டிருந்த அதிகாரிகளை மீண்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உயர்கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் தெரிவித்துள்ளோம் என்றார்.


No comments:
Post a Comment