இங்கு நடந்த சந்திப்புகளிற் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுடன் அவர்களின் நிலைப்பாடுகள் செயற் திட்டங்கள் என்பன தெளிவு படுத்தப்பட்டன. அக்ரோபர் 30 ம் திகதி நடந்த இரவு விருந்தில் எல்லாத் தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்படைய வைத்தார்கள். தமிழர் கூட்டமைப்பின் பல்வேறு நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூடத் தலையாய கடமையாக இந்த விழாவைக் கருதித் தமிழர்களின் தற்போதைய தலைவர்களைக் கௌரவிக்கத் தவறவில்லை.
தலைவர்களும் வாஷிங்டனில் இராஜாங்கத் திணைக்களத்தில் நடாத்திய சந்திப்புக்கள் தந்த உற்சாகத்துடன் பலதையும் தெளிவுபடுத்தினார்கள். இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பரிமாறிய கருத்துக்களின்படி புலம் பெயர்ந்த மக்களின் உணர்ச்சிகளின் எழுச்சிக்கேற்ப அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டு வந்ததையும் சொல்லி முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தால் தலைவர்களை தெரியும் உரிமை கிடைத்துள்ளதையும் சொன்னார்கள்.
பல ஆட்சி மட்டங்களில் ஜனநாயக வழியில் இளம் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதையும் ஒரு கிராம சபையோ நகர சபையோ என மக்களுக்கான சேவைக்காக தலைமைப் பணிகளில் மிகவும் இளையவர்கள் பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருப்பவர்கள் கூட ஈடுபட வேண்டியதாக இருக்கிறது என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது. இதையொட்டி எழுந்த கேள்வி பதில்களில் அங்கு எல்லா உதவிகளிலும் விட மனிதவள உதவி மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது தெரிந்தது.
பணம் தொழில் நுட்பம் என்பவற்றுடன் இவற்றின் பாவனை தெரிந்தவர்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலையாக வாழ்ந்து வரும் எமது மக்களுக்கு நேரடியாக உதவிட வேண்டும்; ஓரிரு ஆண்டுகள் அங்கு வந்து நேரடியாக மக்களுடன் இந்த நிபுணத்துவங்களைப் பகிர்ந்து தேவையான புனரமைப்பு வேலைகளில் பங்கு கொள்ளவது பிரயோசனமாக இருக்கும் என்பது உணரப்படுவதாகத் தெரிந்தது.
முப்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறை. இந்தக் காலத்தில் இடப்பெயர்வுகள் புலப் பெயர்வுகள் கல்விக்கூடங்களுக்கு ஏற்பட்ட இடையுறுகள் என்பதால் ஏற்பட்ட இடைவெளி போரின் காரணமாகவும் அதனால் நடந்த வன்செயலாலும் இனிய இளைய உயிர்கள் பல்லாயிரம் பறிக்கப்பட்டதால் ஈழத்தமிழரிடையே ஒரு பாரிய மனிதவள குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பாரிய வெற்றிடம் சனத்தொகையில் ஏற்பட்டுள்ளது.
போரின் பின்னான சமுதாயக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் திட்டங்களைத் தீட்டும் நிபுணர்களுக்கு இந்த வெற்றிடத்தை நிரப்புவது என்பதும் அத்தியாவசியமான நிபுணத்துவங்கள் உள்ளவர்களைத் தேடுவதும் அதற்குப் பயிற்சி கொடுப்பதும் பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த நேரத்தில் பல்வேறு தொழில்களுக்கும் தொழிலாளர்களும் நிபுணர்களும் தெற்கிலிருந்து வடக்குக்கும் கிழக்கிற்கும் படை எடுத்திருப்பது எங்களைக் கிலேசம் அடைய வைத்துள்ளது. இருந்த போதிலும் இது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு நடைமுறையாகும். அத்துடன் தாயகத்திலிருந்து நாம் புலம் பெயர்ந்ததால் நம் ஒவ்வொருவருடைய இடமும் வெற்றிடமாக இருப்பதும் தெரிந்ததே.
இந்த நேரத்தில் இலங்கை அரசும் விசா, குடியுரிமை சம்பந்தமான விதிகளை இறுக்கி இந்த விதமான குடிவரவு திருப்பி நடக்காமற் பார்ப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது. ஆனால் இலங்கை அரசுக்கு மீண்டும் வன்செயலை வெளிநாட்டுத் தமிழர்கள் இறக்குமதி செய்து விடுவார்களோ என்பது இந்த விதிகளை இறுக்குவதை நியாயப்படுத்தும் ஒரு காரணமாக இருக்கிறது. இப்படித் தனியாக ஒருவர் இருவர் இப்படி இலங்கை சென்று வாழ்ந்தாலும் இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை.
கனடாவைப் பொறுத்தமட்டிற் கனடிய பணமோ கனடியர்களோ இலங்கையில் வன்செயலில் ஈடுபடுவதையோ தூண்டுவதையோ கனடிய அரசாங்கமும் விரும்பாது. மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புக்களும் இந்தக் கோட்டைப் புலம் பெயர்ந்த அமைப்புக்கள் தாண்டுகிறனாவா என்பதை அவதானிப்பதிற் கவனமாக இருக்கும். இந்தப் பாதையில் நாம் செல்வது என்பது இன்று நமது மக்களின் மீது இருக்கும் சர்வதேசத்தின் கவனத்தைப் பலவீனப்படுத்தி விடும்.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு நடக்கும் போராட்டங்களின் வடிவங்கள் பல இங்குள்ள தமிழர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக அமையலாம். ஆனாற் தூரநோக்கில் தமிழீழ மக்களின் அரசியல் பொருளாதார சமுதாய வளர்ச்சியை எப்படிப் பாதிக்கும் அல்லது அந்த வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்று இங்கு நடவடிக்கைகளைத் தீர்மானிப்போர் தலைமை தாங்குவோர் தெளிவாக இருக்க வேண்டும்.
இங்கும் மே 2009க்குப் பிறகு ஒரு தலைமை வெற்றிடமும், அதைக் தொடர்ந்து அந்த இடத்திற்குப் பலத்த போட்டி, பல கோணங்களில் இருந்தும் நடக்கையில், புலம் பெயர்ந்த நாம் ஈழத் தமிழருக்கு என்ன தேவை என்று நினைப்பதை விட அங்கு வாழும் மக்கள் எது தங்களுக்குத் தேவை எதை நடைமுறையில் தங்களால் அடையலாம் என்பதை தேரும் போது அதற்கு அங்கிருக்கும் தலைவர்களை அனுசரித்து அந்த நோக்கதிற்கு தேவையான உதவியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.
பேசிய தலைவர்கள் பல விடயங்களைப் பேசினார்கள். என் மனதில் ஆழமாக உறைத்தது இந்த மனிதவளக் குறைபாடுதான். இதை எமது புலம் பெயர் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டது ஒரு பாரம் குறைந்தது போல இருக்கிறது.
-மாறன் செல்லையா-
maran.chelliah@rogers.com


No comments:
Post a Comment