நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். இரண்டு மாவீரர் தினம் நடக்காது தடுக்கக் கூடிய மனிதர்கள் இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் புலம் பெயர்வாழ்வில் இருக்கிறார்கள், அவர்களால் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை நிச்சயம் தடுக்க முடியும்.எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழ் தேசியம் சிதறிக்கப்படாது, சிங்கள சிறிலங்கா அரசு முள்ளிவாய்க்காலுக்கு அடுத்து புலம்பெயரில் ஓர் மாபெரும் வெற்றியை பெற நாம் துணை போனதாக சரித்திரம் இருக்கப்படாது என எண்ணும் ஒவ்வொரு பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டாளர்களால் இரண்டு மாவீரர் தினம் நடைபெறுவதை நிச்சயம் தடுத்து நிறுத்த முடியும்.
பொறுப்பு வாய்ந்தவர்களின் அறிக்கையினால் இதை தடுக்க முடியும்.
மாவீரர்களை, தேசியத் தலைவரை மதித்து, கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்று வந்த தமிழீழ விடுதலை போராட்டம், தாயாக பூமியில் வாழும் எமது உடன் பிறவாச் சகோதரர்கள் மானத்துடன் வாழ வேண்டும் போன்ற காரணிகளை மனதில் கொண்டு நிச்சயம் இரண்டு மாவீரர் தினம் நடக்கவிருப்பதை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் தடுக்க வேண்டும்.
இவ் விடயத்தில் விட்டுகொடுப்பதனால் யாரும் சிறியவராகவோ பெரியாவராகவோ மாட்டீர்கள்.
வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய அனுமதியுங்கள். இவ்விடயத்தில் தயவு செய்து பேரம் பேசாதீர்கள். இவ்விடயத்தில் விடப்பிடியாக நிற்கும் உங்களை, சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகிறவர்களென்று மக்களினால் சுமத்தப்படும் வீண் பழியை நீங்கள் சுமப்பீர்கள்.
வழமையாக வருடாவருடமாக மாவீரர் தினம் செய்தவர்கள் தொடர்ந்து செய்ய நீங்கள் அனுமதிப்பதன் மூலம் உங்கள் அமைப்பிற்கும் ஒர் மாபெரும் பெருமையை நீங்கள் தேடிக் கொள்வீர்களென்பதில் எவ்வித ஐயமில்லை.
உங்கள் தரப்பில் நின்று குழப்பங்களை விரும்புவோர், நீங்கள் இன்னுமோர் மாவீரர் தினம் நிச்சயம் நடத்தியே ஆக வேண்டும் என்பதில் விடாபிடியாக நிற்பார்கள்.
காரணம் இவர்களது இலக்கு தமிழ் தேசியம் சிதைக்கப்பட வேண்டுமென்பது மட்டுமல்லாது, இவர்களுக்கு இதன் அருமை பெருமை பற்றி அறியுமளவிற்கு அரசியல் அறிவோ, பொது அறிவோ போதாமையும் காரணங்களாகவுள்ளன.
ஆனால் உங்கள் அமைப்பு எதிர்காலத்தில் உண்மையான அரசியல் செயற்பாடுகளை மனதில் கொண்டதாக இருந்தால், தயவு செய்து சிறிலங்கா அரசின் சிந்தனைக்கு துணை போகாதீர்கள்.
ஐரோப்பிய குழப்பக்காரர்கள் மூலம் நீங்கள் புலம்பெயர் வாழ் மக்களின் உண்மை நிலையை ஒரு பொழுதும் அறிய மாட்டீர்கள்.
இவர்கள் மக்கள் எண்ணங்கள் அபிப்பிராயத்தை தினமும் திரிபுபடுத்திக் கொண்டிருப்பதுடன், தமது சிந்தனைகளை, திட்டங்களை தினமும் தமது மூன்றாம் நான்காம் தரகர்கள் மூலம் மிகத் தவறான தகவல்களை உங்களுக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மிக நீண்ட காலமாக நாம் அறிந்த உண்மை.
இறுதியாக, இப்பொழுது பெரும்பான்மையான புலம்பெயர் வாழ் மக்கள் குழப்பமடைந்த நிலையில் உள்ளார்கள் என்பது தான் இன்றைய உண்மை நிலை?
புலம்பெயர் வாழ்வில் ஓர் குறிப்பிட்ட மக்கள் முள்ளிவாய்க்காலின் பின்னர் எந்த பிரிவிற்கும் ஆதரவு அளிக்காது நடுநிலையாக வாழ்வதை ஐரோப்பாவில் நாம் பெரிதும் காண்கிறோம்.
ஆனால் இரண்டு மாவீரர் தினம் நடைபெற்றால, ஐரோப்பாவில் நடுநிலையாக வாழும் மக்கள் கூட, சிங்கள அரசின் எதிர்பார்ப்புக்கு துணை போகிறவர்களை நிச்சயம் நிராகரிக்க முனைவார்கள்.
வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும் என்பது தமிழ் பழமொழி. மாவீரர் தினம் செய்வது சிறிய விடயமல்ல என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
இதேவேளை, ஒரு முழு வளர்ச்சி அடையும் முன்பே தேவையற்ற விடயங்களை செய்ய முனைவதால,; மக்களின் ஆதரவை நீங்கள் பெற முடியுமா என்பதையும் நீங்கள் கடுமையாக சிந்திக்க வேண்டும்.
ஆகையால் மக்களின் ஆதரவு குறையக்கூடிய எந்த வேலை திட்டங்களிலும் தயவு செய்து இறங்காதீர்கள் என மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
நன்றி – வணக்கம்
ச.வி.கிருபாகரன்
பிரான்ஸ்


No comments:
Post a Comment