
மனிதஉரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் கோரியிருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில், உறுப்பினர் ஒருவர் கடந்தவாரம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு தாம் மேற்கொண்ட பயணத்தின் போது, இராணுவ, பாதுகாப்பு, காவல்துறைக்கான கருவிகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான எந்த விடயங்கள் குறித்தும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடனேயே தாம் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் வெளியிட்டுள்ள ‘மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2010‘ என்ற அறிக்கையில் விபரவாக கூறப்பட்டுள்ளது.
அதில் சிறிலங்கா கவலைக்குரிய நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் தொடர்ந்து நிலைமைகளை கண்காணித்து வருகிறது.
எமது கரிசனைகளை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசுக்கு எழுப்பி வருகிறோம். மிகஅண்மையில் கூட, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசினேன்.
பாதிக்கப்படக் கூடிய குழுக்களின் மனிதஉரிமை நிலைமைகள் முன்னேற்றப்பட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கப்பட்டு அதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி வருகிறோம்“ என்றும் அலிஸ்ரெயர் பேர்ட் மேலும் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment