நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர் நட்டஈடு கோரும் மூன்று வழக்குகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபருக்கு வொசிங்டன் டிசி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இந்த அழைப்பாணை சிறிலங்கா அதிபரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது.
ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டதையடுத்து சிறிலங்காவின் நீதி அமைச்சு அதைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று சிறிலங்கா நீதியமைச்சின் செயலர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.
தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்த நீதிமன்ற நடவடிக்கையானது சிறிலங்கா அதிபருக்கும் சிறிலங்கா அரசுக்கும் தொல்லை கொடுக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டதொன்று என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்துலக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின் படி, அரச தலைமைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அமெரிக்காவுக்கு செல்ல விடாமல் தடுக்க முனைவது பயனற்ற செயல்“ என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியுயோர்க் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment