கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற 16 வது கூட்டத் தொடரிலும் தற்பொழுது நடைபெறும் 17 வது கூட்டத் தொடரிலும் வேறுபட்ட புள்ளி விபரங்களை கூறியுள்ளதாக பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழர் மனித உரிமை மையம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு சமர்ப்பித்த மனுவில் கூறியுள்ளது.
இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 16 வது கூட்டத் தொடரில் உரையாற்றும் பொழுது 11,696 (பதினொராயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஆறு) முன்னாள் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்ததாகக் கூறினார்.
ஆனால் கடந்த வாரம் 17 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய இதே அமைச்சர், 11,644 முன்னாள் போராளிகள் சரணடைந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த அடிப்படையில் ஆராயும் வேளையில் 16 வது கூட்டத் தொடருக்கும் 17 வது கூட்டத் தொடருக்கும் இடையில் 52 போராளிகளுக்கு என்ன நடந்தது என இலங்கை வெளியிட வேண்டுமென தமிழர் மனித உரிமைகள் மையத்தின் மனு கேள்வி எழுப்புகின்றது.
இதேவேளை, கடந்த 16 வது கூட்டத் தொடரில் ““ஏறக்குறைய 300,000 மக்கள்'' இடம்பெயர்ந்தவர்களாகக் கூறிய சமரசிங்க தற்பொழுது நடைபெறும் 17 வது கூட்டத் தொடல் இடம்பெயர்ந்தோர் தொகையை 290,000 பேர் எனக் கூறியுள்ளார்.
இது மட்டுமன்றி கடந்த 16 வது கூட்டத் தொடரில் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11,696 எனக் கூறிய சமரசிங்க இதில் கொடுக்கப்பட்ட விபரங்களின் பிரகாரம் 739 போராளிகளுக்கு என்ன நடந்தது எனக் கூற இன்றுவரை இலங்கை அரசு தவறியுள்ளது.
இவ்விடயமாக கடந்த மார்ச் மாதம் 7 ம் திகதி தமிழர் மனித உரிமை மையம் கூட்டத் தொடரின் தலைவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புள்ளி விபரங்களை இலங்கை வழங்கும் பொழுது ““ஏறக்குறைய'' எனக் குறிப்பிடுவதை யாரும் ஒரு பொழுதும் ஏற்க முடியாதெனவும், முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுற்று இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சரியான புள்ளி விபரங்களை இலங்கையால் சமர்ப்பிக்க முடியாதது ஓர் புதுமையான விடயம் எனவும், தமிழர் மனித உரிமை மையத்தின் அறிக்கை கூறுகிறது.
இப்படியாக நாளுக்கு நாள் வேறுபட்ட புள்ளி விபரங்களை ஓர் ஜனநாயக நாடு எனக் கூறப்படும் நாடு ஒன்றினால் வழங்கப்படுவது இலங்கையில் பலவிதப்பட்ட உண்மை புள்ளி விபரங்கள் மறைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஒரு திண்மப் பொருளாகக் கருதி எண்ணிக்கை செய்வது கணக்கிடுவது இலங்கையின் பண்பற்ற முறையை நிரூபிக்கின்றது என்றும், இப் புள்ளி விபரங்களை ஆதாரங்களாகக் கொண்டு இலங்கை அரசிடம் உண்மையான புள்ளி விபரங்களை வெளியிடுமாறு கோர வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சரணடைந்த போராளிகளின் பெயர் பட்டியலையும் வெளியிடுமாறும் தமிழர் மனித உரிமை மையம், திருமதி நவநீதம்பிள்ளையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவலின் பிரகாரம் இலங்கை அரச பிரதிநிதிகளினால் சூடாக மிக ருசியான இலங்கை சிற்றுண்டிகள் ஐ.நா. வில் தமது கூட்டங்களில் கலந்து கொள்வோருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சில மேற்கு நாட்டு இராஜதந்திகளின் கருத்து என்னவெனில், இலங்கை முகாம்களில் உணவு இல்லாது வாடும் இடம்பெயர்ந்தோருக்கு இவ் உணவிற்கு செலவிட்ட பணத்தை செலவிட்டால் அவர்களது வயிறு, குறைந்தது ஒருவேளை உணவை உண்ண முடியும் என்பதாக இருந்தது.
எனவே, இலங்கை வழங்கும் புள்ளி விபரங்களிலுள்ள முரண்பாடுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பிரான்ஸ் தமிழர் உரிமை மையம் கோடிட்டுக் காட்டியுள்ளமை குறித்து ஏனைய தமிழர் நலன்சார்ந்த அமைப்புகளும் கரிசனை கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது.
“கலகம் பிறந்தாலே நியாயம் பிறக்கும்'
பிரான்ஸிலிருந்து ச.வி.கிருபாகரன்


No comments:
Post a Comment