பொதுமக்கள் ஒருவராவது கொல்லப்படவில்லை என்று இன்று வரை சாதிக்கும் அரசு இலங்கை பூராகவும் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் அரச செலவில் விசேட பூசைகளையும் அர்ச்சனைகளையும் செய்ய முன்வந்தள்ளது. முன்னுக்குப் பின் முரணாக நடப்பதில் வல்லமை பெற்ற அரசு கொலையையும் செய்யும் கொல்லப்பட்டவருக்கு இரங்கலையும் தெரிவிக்கும்.வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உட்பட சிங்களப்படைகளின் எறிகணை வீச்சு, விமானக் குண்டு வீச்சு, சித்திரவதைகள் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஆத்மசாந்திக் கிரிகைகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 30ம் நாள் வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று சகல சிவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் மோட்ச அர்ச்சனைகள் நடைபெறும் என்று அரச உத்தரவுக்கு அமைவாக கல்வி பண்பாட்டு அமைச்சு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படியான சிறப்புப் பூசை வழிபாடுகளுக்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் இதற்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதென்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனோருக்கு ஆத்ம சாந்திக் கிரிகைகள் நடைபெறுமா என்று கேட்ட போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
வன்னியிலும் வடமாகணத்திலும் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலாயங்களுக்கு அமாவசை தினத்தன்று நடைபெறவிருக்கும் பூசைகள் பற்றிய அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிக் கருத்து தெரிவித்த ஈழம் பிரெஸ் நிருபர் சிவபாலன் கீரிமலை நகுலேஸ்வரம், மன்னார், திருக்கேஸ்வரம் போன்ற சிவாலயங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்றார்.
பெரும்பாலான ஆத்மசாந்திப் பூசைகள் கடலோரக் கோயில்களில் தான் செய்யப்படுகின்றன என்ற படியால் கரையோரப் பாதுகாப்புப் படைகளின் அனுமதி பெறப்பட வேண்டும். அனுமதி கிடைக்காவிட்டால் இந்தக் கோயில்களில் ஆடி அமாவாசைப் பூசைகளைச் செய்ய முடியாது என்றும் சிவபாலன் தெரிவித்தார்.


No comments:
Post a Comment