
இறுதிக்கட்ட யுத்ததில் சரணடைந்த புலிகளின் முக்கிய உறுப்பினர்களையும் சில தளபதிகளையும் இலங்கை இராணுவம் கொலைசெய்தது யாவரும் அறிந்ததே. இதில் புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியாவையும் இலங்கை இராணுவம் கொடூரமாகக் கொலைசெய்த வீடியோக்களும் வெளியாகியிருந்தது. சனல் 4 தொலைக்காட்சி இதனை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. சனல் 4 தொலைக்காட்சி பொய்யுரைப்பதாகவும் அதன் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் இலங்கை அரசு சில தினங்களுக்கு முன்னர் செய்திவெளியிட்டிருந்தது. இதன் ஒரு அங்கமாக தற்போது இசைப்பிரியாவின் புகைப்படங்களை இலங்கை திட்டமிட்ட வகையில் வெளியிட ஆரம்பித்துள்ளது.
இசைப்பிரியா ஒரு முழுநேரப் போராளி என்றும் அவர் ஆயுதங்கள் தூக்கிப் போராடியவர் என்றும் இலங்கை அரசு தற்போது சித்தரிக்க முயல்கிறது. அவர் விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்திருந்த புகைப்படங்களை அவர்கள் தற்போது கசிய விட்டு சனல் 4 தொலைக்காட்சி பொய்யுரைப்பதாக இலங்கை அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அத்தோடு சனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை ஒரு பொதுமகள் எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் அப்படி அல்ல அவர் ஒரு விடுதலைப் புலிகள் உறுப்பினர் எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இசைப்பபிரியா கொல்லப்பட்ட விதத்தால் இலங்கை அரசின் நற்பெயர் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இவர்களின் இந்த நடவடிக்கை ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இது இவ்வாறிருக்கையில் சனல் 4 தொலைக்காட்சியானது இசைப்பிரியா ஒரு போராளி என்பதனை மறுக்கவும் இல்லை, அதேவேளை அவர் ஒரு பொதுமகள் என்று கூறவும் இல்லை. அவர்கள் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் இசைப்பிரியா புலிகளின் செய்திவாசிப்பாளர் ஒரு ஊடகவியலாளர் என்றே தெரிவித்துள்ளனர். இதனைக் கூட அரசு ஊடகங்கள் திரிவுபடுத்திக் கூறிவருகின்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.


No comments:
Post a Comment