இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகளை இராணுவத்தினரே விலைபேசி விற்க முற்பட்டிருப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியின் பின் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த நலன்புரிக் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்பட்டமை, விடுமுறைகள் கடினமாக்கப்பட்டுள்ளமை, மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நோ்ந்துள்ள கதி, யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய இராணுவத் தளபதிகள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றமை ஆகிய விடயங்களின் காரணமாக இராணுவ சேவையிலிருந்து அதிகாரிகள் தரத்தில் உள்ளவர்களும் தற்போது தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு தப்பியோடும் அதிகாரிகள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான காணொளிகள் ஒன்றிரண்டை எப்படியேனும் திரட்டிக் கொண்டே தப்பியோடுகின்றனர். அதனை தமிழர்தரப்புகளுக்கு விற்று பெரும் பணத்தொகையொன்றைப் பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வது அவர்களின் நோக்கமாகவுள்ளது.
அதில் ஒருசிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புகளும் இருப்பதுடன், இன்னும் சிலர் அவ்வாறான காணொளிகளுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு தப்பிச் சென்றவர்கள் மற்றும் தப்பிச் செல்லத் தயாரானவர்களை அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கும் அரசாங்கத்தின் முன்னைய முக்கியஸ்தர்கள் குழுவொன்று அடிக்கடி தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து வருவதாகவும் நம்பகமான தகவல்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்குக் கிட்டியுள்ளன.
இராணுவத்தினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பது குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள அவர், அதனைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார்.
அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளின் பரிமாற்ற மையமாகப் பயன்படுத்தப்படும் தென்னிந்தியாவிலும் இலங்கைப் புலனாய்வாளர்கள் குழுவொன்று களமிறங்கியிருப்பதாகவும், அவர்கள் கொடுத்த தகவல்களின் பிரகாரம் தென்னிந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பல இலங்கையர் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருவதாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.


No comments:
Post a Comment