
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 14ம் நாள் ஒளிபரப்பியிருந்தது.
இந்த ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி மூலம் பிரித்தானியாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளை உலகம் முழுவதிலும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 270,000 இற்கும் அதிகமானோர் இந்த ஆவணப்படத்தை காணொலிப் பதிவு மூலம் பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த ஆவணப்படம் அனைத்துலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திரையிடப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை நியுயோர்க்கில் இந்த ஆவணப்படம் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, நியுசிலாந்து, அயர்லாந்து, கிழக்குதிமோர் உள்ளிட்ட பல நாடுகளின் ஐ.நாவுக்கான தூதரகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பார்வையிட்டிருந்தனர்.
அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையிலும் கடந்த புதன்கிழமை இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், மனிதஉரிமைகளுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆன் கிளொவ்ட் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
அத்துடன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியொபன் மக் டொனா, அன்டி லவ், ஜிம் டோவ்ட், லீ ஸ்கொட், ஜஸ்மின் குரேசி, மைக் கேப்ஸ், பரோனஸ் மில்லர், சூசன் மில்லர், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரைன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment