கவுணாவத்தை வைரவர் ஆலயத்தில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டிச் சரிக்கப்பட்டன.அவற்றில் ஆலயத்தில் வெட்டவென திட்டமிட்டு வளர்க்கப்பட்ட பெரிய ஆடுகள் 300இற்கும் மேற்பட்டவை என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
20 ஆண்டுகளின் பின்னர் ஆலயத்தின் முன்றிலில் மிருகவதை நடக்க இராணுவத்தினரும் பொலிஸாரும் இடமளித்தமையைத் தொடர்ந்து, காலை சுமார் 4.30 மணி முதல் ஆடுகளை வெட்டிச்சரிக்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டது.
மொத்தமாக 1050 கடாக்களும் நூற்றுக்கணக்கான கோழிகளும் ஆலய முன்றலில் வெட்டிச் சரிக்கப்பட்டதை, ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் முட்டி மோதிக்கொண்டு பார்வையிட்டனர்.
கவுணாவத்தையில் வெட்டிச் சரிக்கவென, குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் பெரும் சோடனைகளுடன் டிராக்டர்களிலும் லான்ட் மாஸ்டர்களிலும் கொண்டு வரப்பட்டன.
மேளதாளங்களுடனும், வெடி ஆரவாரங்களுடனும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடாக்கள் வந்தன.
தெல்லிப்பளை, கருகம்பனை, கவுணாவத்தை வைரவர் ஆலயப் பொங்கல் மற்றும் மடைத் திருவிழா நேற்று நடைபெற்றது.
ஆலயம் அமைந்துள்ள பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்ததால், இதுநாள் வரை அங்கு கடாக்களை வெட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
எனினும் படையினரிடம் அனுமதி பெற்று ஒரு கடாவை மட்டும் ஆலய முன்றலில் வெட்டிய பின்னர், ஏனயைவற்றை தனியார் காணி ஒன்றில் வைத்து வெட்டி வந்தனர்.
இம்முறை ஆலயத்துக்குச் செல்ல அனைவருக்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஆயிரம் கடாக்களும் ஆலய முன்றலிலேயே வெட்டிச் சரிக்கப்பட்டன.
வெட்டிச் சரிக்கப்பட்ட கடாக்களை உணவுக்காக வாங்கிச் செல்வதில் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்தவர்கள், நீயா நானா என்று போட்டியிட்டனர்.
முதலாவதாக வெட்டிச் சரிக்கப்பட்ட கடா ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டாதகத் தெரிவிக்கப்பட்டது. உயிருடன் 3 லட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டு ஆலய முன்றலில் வெட்டிச் சரிக்கப்பட்ட ஒரு கடா, ஒன்றரை லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆலயத்தில் வெட்டிச் சரிப்பதற்காக கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வளர்க்கப்பட்ட கடாக்கள் நேற்றுமுன்தினம் இரவு இளவாலை வடக்குப் பகுதிகளான சித்திரைமேழி, வித்தகபுரம், ஆலடி, பன்னாலை, கருகம்பனை, தெல்லிப்பளை, கீரிமலை ஆகிய இடங்களில் வர்ண மின் விளக்குகளால் சுற்றிவர அலங்கரிக்கப்பட்ட இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பின்னர் அவை டிராக்டர்கள், லான்ட் மாஸ்டர்களில் ஏற்றிச் செல்லப்பட்டு இன்று காலையில் கவுணாவத்தை ஆலய முன்றலில் வெட்டிச் சரிக்கப்பட்டன.






No comments:
Post a Comment