இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற உண்மைச் சம்பவத்தை சனல் 4 தொலைக்காட்சி சிறீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் மூலம் ஒளிபரப்பியமைக்கு பிரிட்டன் தமிழ் இளையோர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இனியாவது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்த நாட்டு அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரத்தை எதுவித இணக்கமும் இன்றி ஒளிபரப்பியது ஒரு திறமையான புலனாய்வு ஊடகத்திற்கு உதாரணமாகும். இந்த விவரணக்காட்சி போர் குற்றம் மற்றும் மனிதநேய குற்றம் ஆகியவற்றிற்கு அழிக்க முடியாத ஆதாரம்.
அது மட்டுமின்றி கொடுமைகள் உலகில் எந்த மூலையில் நடந்தாலும் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டியது அனைத்து ஊடகவியலாளர்களின் கடமை என்பதை உணர்த்துகின்றது.
2009 ல் புலம்பெயர் தமிழ் மக்களால் பிரிட்டன் உட்பட பல நாடுகளின் வீதிகளில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் தமிழர் மீதான சித்திரவதைகளை நிறுத்த சர்வதேச தலையீட்டைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால் அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எமது வேண்டுகோள்களை சாந்தப்படுத்துவதற்காக பொது அறிக்கைகள் வெளியிட்டன.
இந்த குற்றங்களை விசாரிக்க வேண்டிய ஐ.நா.சபை இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் பொது இடங்களையும் வைத்தியசாலைகளையும் குறிவைத்துத் தாக்கும் குண்டு வீச்சில் மரணமடைகின்றனரா என்று அவர்களின் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையை நிராகரித்துவிட்டது.
இதன் மீது நடவடிக்கை எடுக்காதது உலக நாடுகளின் மிகப் பெரிய குற்றம்.
பிரிட்டன் தமிழ் இளையோர் அமைப்பு முக்கியமாக இறுதி மூன்று வருட போரில் பிரிட்டன் நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக போர்குற்ற விசாரணையில் குற்றவாளியாக நிற்பவர்களுக்கு 13.6 கோடி பவுண்கள் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இப்போதும் பிரிட்டன் தொடர்ந்து இலங்கை அரசின் இராணுவத்திற்கும் பண உதவி அளித்து வருகின்றது.
போரின் போது அரசாலும் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களால் பாதிப்படைந்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவிக்கும் என எதிர்பார்த்ததை இரண்டு வருடங்களிற்கு பின் இலங்கை நிரூபித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை கொண்டு வருவது சர்வதேச சமூகத்தின் கையில் தங்கியுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment