ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது.
கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
இலங்கை அதிபர் ராஜபசேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.
ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.
இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.
காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றார்.


No comments:
Post a Comment