
முதல்வர் ஜெயலலிதா 3 நாள் பயணமாக திருச்சி சென்றுள்ளார். திருச்சி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா. ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து இந்த முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. இதையடுத்து அவர் தற்போது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள் பயணமாக திருச்சி வந்துள்ளார். இன்று காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார் ஜெயலலிதா. அங்கு அவருக்கு அதிமுகவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் திருச்சி சங்கம் ஓட்டலுக்குச் சென்று சற்று ஓய்வெடுத்த ஜெயலலிதா பின்னர் ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்றார். அங்கு ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் திருச்சி மாம்பழச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கான அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். பின்னர் மீண்டும் சங்கம் ஓட்டலுக்கு அவர் சென்று ஓய்வெடுக்கிறார்.
இன்று மாலை ஸ்ரீரங்கம் தெற்குச் சித்திரை வீதி, மேலச் சித்திரை வீதி சந்திப்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அரசு உதவிகளையும் பயனாளிகளுக்கு அவர் வழங்குகிறார். விழா முடிந்த பி்ன்னர் மீண்டும் சங்கம் ஓட்டலுக்குத் திரும்பும் ஜெயலலிதா, நாளை மாலை தனது நன்றி தெரிவிக்கும் பயணத்தைத் தொடங்குகிறார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அவர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். 5 இடங்களில் அவர் பேசவுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்டு, மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவிக்கிறார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தை அத்துடன் முடிக்கும் ஜெயலலிதா பின்னர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.
ஸ்ரீரங்கம் ஜெயலலிதா முதல்வரான பின்னர் முதல் முறையாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் வருவதால் இரு நகரங்களிலும் விழாக் கோலம் காணப்படுகிறது. அதிமுகவினர் பெரும் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். சாலைகள் பளிச்சென காணப்படுகின்றன.


No comments:
Post a Comment