கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இராணுவதினராலோ, பொலிஸாரினாலோ பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையாம்.511 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கொஸ்த்தா அந்தப்பகுதி மக்களின் தெய்வமாம்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலேயே இவ்வாறு கூறப்பட்டது.ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சில்வெஸ்திரி அலன்ரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்மக்கள் பாதுகாப்பு, பொலிஸ் திணைக்களம், மனித உரிமைகள் நிலையம், மத்தியஸ்தர் சபை, சிறுவர் பாதுகாப்பு என ஒவ்வொரு விடயமாகப் பரிசீலனை செய்யப்பட்டது.
இவ்வேளையில் பிரிகேடியர் கொஸ்த்தா இந்தப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புத் தொடர்பாகவும், மக்களின் அபிவிருத்திக்கு இராணுவத்தினரின் பங்களிப்புத் தொடர்பாகவும் விளக்கினார்.
அதேபோன்று கோப்பாய் மற்றும் அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் தமது செயற்பாடுகளைத் தெரிவித்தனர்.இந்தச் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் இராணுவத்தினரும், பொலிஸாரும் தமது தரப்புத் தொடர்பாகக் கூறிவிட்டனர். பொதுமக்கள் என்ற வகையில் இராணுவத்தினராலும், பொலிஸாராலும் உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் கூறுங்கள் என்று மக்களிடம் கேட்டார்.
பிரிகேடியர் கொஸ்த்தாவும் தனது பங்கிற்கு நீங்கள் பயப்படாமல் கூறலாம், எங்கள் மீது முறைப்பாடுகள் இருந்தாலும் தெரிவிக்கலாம் என்றார்.
பொதுமக்கள் எவ்விதமான கருத்தையும் கூறாமல் அமைதியாக இருந்தனர். இதனை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் பிரச்சினைகளே இல்லையா? அல்லது அமைதியாக இருக்கின்றீர்களா? என்றார்.பொதுமக்கள் பகுதியில் இருந்து ஒருவர் மெதுவாக வாய் திறந்தார். கொஸ்த்தா ஐயா எங்கள் காவல் தெய்வம். இப்பொழுது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிவிட்டு அமர்ந்தார்.


No comments:
Post a Comment