தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆதரவு கோரி வருகின்றனர்.இவை எதற்காக என்று தெரியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டு விடயங்கள் தொடர்பில் எம்முடனே கலந்துரையாட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சார்க் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக மாலைதீவு சென்றிருந்த ஜனாதிபதி இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களுக்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழுவில் இடம்பெறவுள்ளோரின் பெயர்களைத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இன்னமும் அனுப்பி வைக்கவில்லையென்றும் இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் ரீதியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். கடந்த ஒன்றரை மாதங்களாக அவர்கள் சுறு சுறுப்புடன் இருந்து வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆதரவு கோரி வருகின்றனர். எதற்காக ஆதரவு கோரி வருகின்றனர் என்று எனக்குத் தெரியாது.
உள்நாட்டு விடயங்களை எம்முடனே பேச வேண்டும். ஏனெனில் இறுதியில் இது அரசாங்கத்தினுடைய விடயங்களாகும். இதற்கென நாங்கள் குழுவொன்றை அமைத்துள்ளோம். இந்தக் குழுவில் இணைவதற்கு இதுவரை அவர் பெயரை அனுப்பிவைக்கவில்லை என்றார்.
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக சகலரும் இறுதி பத்து நாட்கள் பற்றியே கதைக்கின்றனர். ஆனால்,கடந்த முப்பது வருடங்கள் பற்றி எவரும் கதைப்பதில்லை என்றும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:
Post a Comment