பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய மாவீரர் குடும்பங்களே,
மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த உருத்திராபதி சேகர் ஆகிய உங்கள் சகோதரன் உங்களுக்கு விடுக்கின்ற ஒரு அன்பு அழைப்பு இது. மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத உணர்வுகளை உங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதனால் உங்களுக்காக இந்த அன்பு மடலை நான் வரைகின்றேன்.
நீங்களும் என்னைப்போலவே உங்கள் பெற்றார், கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உறவுகளை இந்த உன்னதமான தமிழீழ சுதந்திரப் போராட்டத்தில் இழந்து நிற்கின்றீர்கள்.
நானோ அல்லது நீங்களோ இவர்களது தியாகங்கள் வீணாகப் போய் விட்டது என்று ஒரு கணமேனும் இன்று வரையில் நினைத்து கூடப் பார்த்தது இல்லை, இனிமேலும் அப்படி நினைத்துப் பார்க்கப் போவதுமில்லை.
ஏனெனில், எங்கள் இரத்த உறவுகள் தம் உயிரினும் மேலாக நேசித்த ஒரு தூய்மையான இலட்சியத்திற்காக எங்கள் தேசியத் தலைவனின் வழிகாட்டலில் துணிந்து பயணித்தவர்கள். மரணத்தைப் பொருட்படுத்தாமல், தமது இலட்சியத்தில் உறுதியுடன் இருந்து இறுதிக் கணம் வரையிலும் இவர்கள் தளராது போரிட்டவர்கள்.
தாய்மண்ணின் விடுதலைக்காக, தம் உயிரினும் மேலாக நேசித்த தங்கள் மக்களின் சுதந்திர வாழ்வுக்காக, எங்கள் ஈழத்தமிழினத்தின் இருப்புக்காக, துணிந்து எவ்வளவோ தியாகங்களைப் புரிந்து, கணக்கற்ற இன்னல்களைச் சந்தித்தவர்கள்.
இவர்கள் தங்களது நீண்ட போராட்ட வாழ்வில் சந்தித்த சோதனைகளும், துன்பங்களும், வேதனைகளும், வலிகளும் வார்த்தைகளால் கூட வடித்துவிட முடியாதவை.
எங்கள் தேசத்தை பேரினவாத சிங்களத்திடமிருந்து மீட்பதற்காக தங்களது இன்னுயிர்களைக் கொடுத்த எங்கள் மாவீரச் செல்வங்களை நாங்கள் வழமை போல் பெருமையுடன் நினைவு கூறுகின்ற அந்தப் புனிதமான கார்த்திகை மாதம் இது.
எங்கள் தேசத்தலைவனின் வழிகாட்டலிலே தீரப்போர் புரிந்து சிங்கள இனவெறியர்களை தீயில் குளிக்க வைத்த எங்கள் தேசத்தின் புதல்வர்களை நாங்கள் போற்றிக் கொண்டாடிடும் அந்த அற்புதமான நேரம் இது.
தமிழனின் மாசற்ற வீரத்தை அகிலமென்கினும் பறைசாற்றிடும் எங்கள் வீரமறவர்களை நாங்கள் நன்றியுடன் வணங்கிடும் அந்தப் பொன்னான கணங்கள் இவை.
மாதங்கள் பல கடந்தும் முள்ளிவாய்க்கால் பேரவலங்கள் ஏற்படுத்திய ரணங்கள் முற்றாக ஆறாமல், இன்றும் கூட உலகத்தமிழ் நெஞ்சங்களின் இதயங்கள் யாவும் வலியால் இன்னமும் மௌனமாகத் துடி துடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
புலத்தில் எங்கள் தமிழ்ச் சகோதரிகளின் மானம் சிங்கள இனவெறியர்களின் கைகளிலே இன்றும் கூட சிக்குண்டு சின்னபின்னமாவதனைப் பார்த்து பார்த்து எங்கள் இதயங்கள் யாவும் எங்கள் இயலாமையை நினைந்து நினைந்து இன்னமும் அவமானத்தினால் உறைந்து போய்த்தான் உள்ளன.
சிங்களத்தின் கொடுஞ்சிறைகளினுள்ளே எங்கள் தமிழ் சகோதரர்கள் தினம் தினம் படும் சித்திரவதைகளைக் கேட்டுக் கேட்டு எங்கள் இதயங்கள் யாவும் கொடும் சினத்தினால் இன்னமும் விறைத்துப் போய்த்தான் உள்ளன.
தங்கள் பிள்ளைகள் சிங்களத்தின் கரங்களிலே சிதறிப்போவதனைப் பார்த்துப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் எங்கள் தமிழ்ப் பெற்றோர்களின் இதயக் குமுறல்கள் யாவும் இங்கே எங்கள் இதயங்களினுள்ளே வந்து இன்னமும் பேரிடியாய் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்களை மட்டுமே நம்பித்தான் எங்கள் தேசத்தலைவனும், எங்கள் தேசத்தின் புதல்வர்களும் தங்களது கடைமைகளை எங்களிடம் கையளித்து தமது போராட்டத்தினை மௌனித்து இருக்கின்றார்கள்.
சிங்களத்தின் காலடியிலே மிதியுண்டுள்ள எங்கள் மண்ணும், சிங்களத்தின் கரங்களிலே சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்ற எங்கள் மக்களும் கூட, புலம் பெயர்ந்து வாழுகின்ற எங்களை நம்பித்தான் இன்றும் கூட, எங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மற்றொரு புறம், இனவெறி பிடித்த சிங்களவனோ எங்களை ஏளனத்துடன் பார்த்த வண்ணம் எக்காளமிட்டு நகைத்துக் கொண்டிருக்கின்றான். எங்களுக்கு முன்னாலுள்ள கடைமைகளோ ஆயிரம் ஆயிரம். ஆனாலும் கூட, நாங்கள் இன்னமும் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?
சகோதர யுத்தம் செய்து கொண்டிருக்கும் நேரமா இது? முள்ளிவாய்க்கால் பேரவலங்களிலிருந்து நாங்கள் எதனையுமே இன்னமும் கற்றுக் கொள்ளவில்லையா? எங்கள் தேசப்புதல்வர்களின் ஆத்மாக்கள்தான் இனி எங்களை எப்போதாவது மன்னிக்குமா?
"எழுந்து வாருங்கள்! நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்து வாருங்கள்!
விண்வரும் மேகங்கள் பாடும்! மாவீரர்கள் நாமங்கள் கூறும்!
கண்வழி கங்கைகள் பாயும்! இவர் காவிய நாயகர் ஆகும்!
புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்!
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்!"
இந்தப் புனிதமான கார்த்திகை மாதத்திலாவது எங்களுக்குள்ளே இருக்கின்ற கருத்து வேறுபாடுகள் யாவற்றையும் நாம் ஒருபுறம் தள்ளி வைப்போம். எதிர்வரும் 27ஆம் நாளன்று எங்கள் மாவீரர்களை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நினைவு கூர்வோம்.
எங்கள் ஒற்றுமைக்காகவும், எங்கள் மக்களையும் எங்கள் மண்ணையும் எதிரிகளிடமிருந்து மீட்பதற்குத் தேவையான ஆன்மபலத்தினை எங்களுக்குத் தர வேண்டியும் அந்தப் புனிதமான ஆத்மாக்களை நாங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மௌனமாக, மானசீகமாக, ஒன்று சேர்ந்து மீண்டும் ஒருதடவை பிரார்த்திப்போம் வாருங்கள் எங்கள் இரத்த உறவுகளே.
இந்த இலட்சிய நோக்கோடு, வழமை போல் இந்த வருடமும் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து, மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களான நானும், ஜெயசங்கர் முருகையாவும் சேர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, 15-11-11 ஆம் நாளன்று, காலை 8:00 மணியிலிருந்து மாலை 8:00 மணி வரைக்கும் "ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்" ஒன்றினை லண்டனிலுள்ள ஈலிங் (Ealing, England) கனக துர்க்கை அம்மன் கோவிலில் ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்உண்ணாவிரதத்தில் மாவீரர் குடும்பங்கள் உட்பட, அனைத்துத் தமிழ் உறவுகளையும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடனும், உரிமையுடனும் நான் பணிவுடன் வேண்டி நிற்கின்றேன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!
For Contacts: ruthira.sekar@hotmail.co.uk and jeya_shankar@hotmail.com


No comments:
Post a Comment