
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேல் நீதிமன்றக் கட்டடத்தில் அறிவிக்கப்பட்டது.
நீதவான் தீபாலி விஜேசுந்திர தலைமையிலான ட்ரயல் எட் பார் நீதவான் குழாம் இந்த வழக்கை கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சரத் பொன்சேகா நேர் காணல் வழங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பாதுகாப்புக் செயலாளருக்கும், நாட்டுக்கும் களங்கம் ஏற்படும் வகையில் சரத் பொன்சேகா தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் குழாம், சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றினால் சரத் பொன்சேகாவிற்கு 30 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
படையினருக்கோ, நாட்டுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என நான்கு நட்சத்திர ஜெனராலாக பதவி வகித்த சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிக்கா போலியாக தம்மீது குற்றம் சுமத்துவதாகவும் தம்முடனான நேர்காணல் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரு நீதவான் சரத் பொன்சேகா குற்றமற்றவர் என தெரிவித்தார்
வெள்ளைக் கொடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றமற்றவர் என விசாரணையின்போது ஒரு நீதவான் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, சுல்பியர் ராசின் மற்றும் வேரவௌ ஆகிய மூவர் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதில் நீதவான் தீபாவலி விஜேசுந்தர மறறும் சர்பிக் ராசின் ஆகியோர், மூன்று குற்றச்சாட்டுக்களில் ஒன்றில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளனர்.
வழக்கை விசாரணை செய்த பி. வேரவௌ என்னும் நீதவான் சரத் பொன்சேகா மூன்று குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளி கிடையாது என அறிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பிடிக்காத தரப்பினர் தம்மை சிறையில் அடைக்க வேண்டுமென விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment