
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தமிழக முதல்வரின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சப்போவதில்லை என்றும் சீறிப் பாய்ந்துள்ளது.
இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படவேண்டுமானால் இருநாட்டு மத்திய அரசுகளும் பொதுவானதொரு உடன்படிக் கையை இந்த விடயத்தில் கையாளவேண்டும் என்று அந்த இயக்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முடிவுகள் பற்றி "உதயனு"க்குத் கருத்து வெளியிடும்போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் புகுந்து சட்டவிரோத உபகரணங்களைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் எமது நாட்டு கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் எமது நாட்டு மீனவர்களுக்கும் இது பேரிடியாக அமைந்துள்ளது. ஏனைய நாட்டினது கடல் எல்லைக்குள் புகுந்து மீன்பிடியில் ஈடுபடுவது சட்ட விரோதம். அந்த வரையறைகளை மீறி மீனவர்கள் செயற்படும்போது கடற்படையினர் நடவடிக்கை எடுக்க நேரிடுமே தவிர, அதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கமுடியாத நிலையே உருவாகும்.
எமது நாட்டு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் சென்றால் அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்கின்றனர். கைது செய்வதையோ அல்லது தண்டனை வழங்குவதையோ தாக்குதல் எனக் கூற முடியுமா?
தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிரான கடும் போக்குடையவர். எதையும் ஆராயாமல் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றார்.
தமிழகத்தில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பேசினால் மட்டும் அரசியல் பிழைப்பு நடத்தமுடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தக் கோட்பாட்டுக்கிணங்கவே சிலர் செயற்படுகின்றனர். நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை மத்திய அரசுக்கும் இடையில்தான் கொடுக்கல் வாங்கல். நாம் தமிழக அரசுடன் அரசியல் நடத்தவில்லை. எனவே, ஜெயலலிதாவின் கொக்கரிப்புக்கு இலங்கை அஞ்சாது என்பதுடன், அவரின் கொக்கரிப்பு இலங்கையில் செல்லாக்காசாகவே கருதப்படும் என்றார் அவர்.


No comments:
Post a Comment