
சிறிலங்கா பிளவுபடுதல், தனித் தமிழ் தாய்நாடு உருவாதல் ஆகியவற்றிற்கான மிகப் பலமான நிலைப்பாட்டை உருவாக்குதல் தொடர்பாக எந்தவொரு எதிர்க் கருத்துக்களும் இல்லை என்று இடதுசாரி எழுத்தாளரான றொன் றைடினோர் (Ron Ridenour) கடந்த வாரம் சென்னையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
“பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற கசப்பான வரலாற்றின் பார்வையில் தமிழீழம் என்பது அவசியமானதாக இருந்துள்ளது. புரட்சிகர வீரரான சேகுவரா தற்போது உயிருடன் இருந்திருந்தால், தமிழர் போராட்டத்திற்கு அவர் தனது ஆதரவை வழங்கியிருப்பார்“ என றொன் குறிப்பிட்டார்.
“புரட்சிகர இயக்கம் என்பது புரட்சிகரத்தின் கருத்தியல் ரீதியான உந்துசக்தியாகும். புரட்சிவீரர் ஒருவர் தனது பாட்டாளி வர்க்க அனைத்துலகவாதம், தன்னால் தலைமை தாங்கப்படும் புரட்சி போன்றவற்றை மறந்தால், இந்தப் புரட்சிவாதி ஏகாதிபத்தியம் என்ற ஆடம்பரமான வசதி மிக்க மயக்கத்திற்குள் மூழ்கிவிடுவார்.
இதனால் இந்தச் சந்தர்ப்பத்தை எமது எதிரி நன்கு பயன்படுத்துவான். பாட்டாளிவர்க்க அனைத்துலகவாதம் என்பது எமது கடமையாகும், அத்துடன் புரட்சிகர அடிப்படையில் அவசியமானதுமாகும்.

ஆகவே நாங்கள் எமது மக்களுக்கு கல்வியை வழங்க வேண்டும்' என 'சோசலிசமும் மனிதனும்“ என்ற நூலில் சேகுவராவால் குறிப்பிடப்பட்ட கோட்பாட்டை றொன் எடுத்து விளக்கினார்.
“சேகுவேராவின் இந்தக் கோட்பாடுகள் சிறிலங்காத் தமிழர்கள் விடயத்தில் மிகப் பொருத்தமானதாக உள்ளது. சேகுவேரா இருந்திருந்தால் நீங்கள் உங்களது சமஉரிமையைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுவதை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றே நான் நம்புகின்றேன்.
சிறிலங்காவின் ஆதிக்க சக்திகளுடன் போராடி இதனைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உங்களது சொந்த நாட்டைப் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுவதை சேகுவேரா விளங்கிக் கொண்டிருப்பார்“ என றொன் தெரிவித்தார்.
'குறுக்குப் பாதைகளுக்கு அப்பால் கியூபா' மற்றும் 'கடலில் கியூபா' ஆகியன உள்ளடங்கலாகப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்ட றொன் லத்தீன் அமெரிக்க விவகாரங்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் தொடர்பாக லத்தீன் அமெரிக்கர்கள் தமது கவனத்தைச் செலுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள றொன், 'சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல, அங்கு வாழும் முஸ்லிம் மக்கள், சுதேசிகள், சிங்களப் பணியாளர்கள், ஏழைகள் போன்றோருக்கு எதிராகவும் மனிதஉரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன“ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் மக்களாகிய நீங்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டதால் உங்களது போராட்டத்திற்கு நான் ஆதரவாக இருந்துள்ளேன்“ என சிறிலங்காவில் இடம்பெற்ற ஈழப் போராட்டம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோது றொன் இவ்வாறு குறிப்பிட்டார்.
'தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பல இன்னல்களை எதிர்நோக்கிய தமிழர்கள் அதன் பின்னரே ஆயுதங்களைத் தூக்கியதுடன் தொடர்புபட்ட வரலாற்றை கியூபர்கள் புரிந்து கொள்ளவில்லை' எனவும் றொன் தெரிவித்தார்.
“முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் அமைதிவழியில் போராடியிருந்தனர், ஆனால் அமெரிக்காவில் இருந்த கறுப்பினத்தவர்களுக்கு எதிராகவும், இஸ்ரேலியர்களால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளை விட சிறிலங்காவில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர்“ எனவும் றொன் நினைவுபடுத்தினார்.
லத்தீன் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள சமூகவாதிகள், பொதுவுடமைவாதிகள், உள்நாட்டு அமைப்புக்கள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு ஈழப் போராட்டம் தொடர்பாக அவர்களுக்கு விளக்கம் கொடுக்குமாறு தமிழ் ஆதரவு சக்திகளை றொம் கோரியுள்ளார்.
“உங்களுடைய வரலாறு தொடர்பாக நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். அதாவது ஏன் நீங்கள் ஆயுதம் தூக்கினீர்கள், தனிநாட்டுக்காக ஏன் போராடினீர்கள், சுதந்திர தேசம் ஒன்று உங்களுக்கு ஏன் தேவை என்பது தொடர்பாக நீங்கள் அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.
அவர்கள் உங்களுடைய துன்பங்களை, கடினங்களை, தமிழீழம் ஏன் அவசியமானது போன்றவை தொடர்பாக அவர்கள் கேட்டறிய வேண்டியுள்ளனர்“எனவும் றொம் தெரிவித்தார்.
தமது நாட்டில் வாழும் சுதேச மக்களுக்கு சம உரிமையை வழங்கியதன் மூலம் பொலிவியா, வெனிசுலா, ஈக்குவேடார் போன்ற நாடுகளில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கங்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான வாக்களிப்பில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர்.
'புதிய அரசியல் சாசனத்தின் பிரகாரம் பொலிவியாவில் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று மொழிகள் சுதேச மக்களுக்குச் சொந்தமானதாகும்.
இதேபோன்ற சில மாற்றங்கள் லத்தீன் அமெரிக்க சோசலிச ஆதரவு அரசாங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என றொன் சுட்டிக்காட்டினார்.
'இந்த நாட்டு மக்கள் உங்களது பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்வார்களானால், நீங்கள் மிக இலகுவாக இவ்வாறான சம உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் நீங்கள் கூறும் கருத்துக்களை செவிமடுத்து சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்திக் கொள்வார்கள்' எனவும் அவர் தெரிவித்தார்.
'உலகெங்கிலும் வாழும் நாங்கள் ஒன்றாக இணைந்து சிறிலங்கா அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கான அழுத்தத்தை மேற்கொள்ள வேண்டும்' எனவும் எழுத்தாளர் றொன் தெரிவித்தார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் றொன் எழுதிய 'சிறிலங்காவில் தமிழர் தேசம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.


No comments:
Post a Comment