கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என விசாரணை நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி கூறியிருப்பது, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை அவமதிக்கும் செயலாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களின் வாழ்வாதாரங்களுக்கு கேடானது என்று கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என விசாரணை நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அவமதிக்கும், மிரட்டும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களின் அச்சத்தைப் போக்க உதவுவோம் என்று கூறி, பிரதமர் அமைத்த நிபுணர் குழு, போராட்டக் குழுவினருடன் ஒரே ஒருமுறை மட்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், போராட்டக்குழுவினரை மிரட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது ஏன்?
மத்திய அரசின் நிபுணர் குழுவிடம், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு விவரங்கள் அனைத்தையும் அறிந்து மக்களுக்கு எடுத்துக் கூற, 60 வினாக்களை போராட்டக்குழுவினர் எழுப்பியுள்ளனர். இதற்கான பதிலை இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்து பெற்றுத் தருவோம் என்று மத்திய அரசின் நிபுணர் குழுவும் உறுதியளித்திருக்கிறது.
இந்த நிலையில் நெல்லைக்கு வந்த நாராயணசாமி, போராட்டக்குழுவினர் கேட்ட முக்கியமான 6 கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூறுவோம் என்று கூறியுள்ளார். 2ஜி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் ஆகியவற்றில் அடித்த இரண்டு லட்சம் கோடி ஊழல் பணம் எங்கே போனது என்பதை மத்திய அரசு கண்டு பிடிக்கட்டும்.
அணு உலைகளுக்கு ஆதரவாக பேசுவோர், போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது. அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திப் பேசும் உங்களுக்கு எந்த அணு உலை தயாரிப்பு நிறுவனம் பணம் தருகிறது? அதற்கெல்லாம் விசாரணை நடத்த தயாராக இருக்கிறாரா நாராயணசாமி? கூடங்குளம் அணு உலைகளை எதிர்த்து போராடி வரும் மக்களை நேரில் சந்தித்துப் பேச திராணியற்ற மத்திய அமைச்சர், போராடும் மக்கள் மீதும், போராட்டக் குழுவினர் மீதும் அவதூறு பேசுவது, அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தால் அணு உலையின் ஆபத்து வெட்ட வெளிச்சமாகி விடும் என்ற அச்சத்தினால்தான் என்பது புரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment